

நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள சிவசங்கரன், திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் வேட்பாளராக தற்போதே களம் இறங்கி தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழநி, நத்தம், வேடசந்தூர் என ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
கடந்தமுறை ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மூன்று தொகுதிகளைப் பெற்றது. ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட திமுக நான்கு தொகுதிகளைப் பெற்றது.
நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
அடுத்து நடந்த மக்களைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றதன் நம்பிக்கையில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளது.
இதில் முதற்கட்டமாக நத்தம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சிவசங்கரன் களம் இறங்கியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் இவரே போட்டியிட்டார். மாநில கொள்கைபரப்புச் செயலாளராக உள்ள இவர், சென்னை சென்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்துவிட்டு வந்து தனது தொகுதியில் தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளார். தற்போதே சின்னத்துடன் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.
கரோனா காலத்தில் கிராமப்புற மக்களுக்கு கபரசுரகுடிநீர் வழங்குதல், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக மக்களை திரட்டிப் போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட பல மக்கள நல செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்ததால் இந்தமுறை நம்பிக்கையுடன் களம் இறங்குவதாக சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.