

தற்காலிக மேற்கூரையை அகற்றியதால் வெயில், மழையில் பொருட்கள் வீணாகி நஷ்டம் ஏற்படுவதாக ஏஐடியுசி திருச்சி மாவட்ட தரைக் கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் நடைபாதை மற்றும் நந்தி கோயில் தெரு ஆகிய இடங்களில் பல ஆண்டுகளாகத் தரைக் கடை, சிறு கடை அமைத்து 150-க்கும் அதிகமானோர் வியாபாரம் செய்து வந்தனர். இந்தக் கடைகளுக்கு பிளாஸ்டிக், ரெக்ஸின் ஆகியவற்றால் தற்காலிக மேற்கூரைகளை வியாபாரிகள் அமைத்திருந்தனர். இதனிடையே, போலீஸாரின் அறிவுறுத்தலை ஏற்று மேற்கூரையை அகற்றிவிட்டனர். இதனால், வெயில், மழை ஆகியவற்றால் பொருட்கள் வீணாகி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக வியாபாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதையடுத்து, தற்காலிக மேற்கூரை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐடியுசி தரைக் கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.அன்சார்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி பொதுச் செயலாளர் கே.சுரேஷ், சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சிவா, மாவட்டப் பொருளாளர் ஏ.பிரகாஷ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து வியாபாரிகள் கூறும்போது, “தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பேன்ஸி பொருட்கள் எனக் கடைகளுக்கேற்ப ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பொருட்களைத் தருவித்துள்ளோம். கரோனாவால் ஏற்கெனவே வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகை வியாபாரம் கைகொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், கடைகளுக்கு மேற்கூரை இல்லாததால் வெயில், மழை ஆகியவற்றால் பொருட்கள் வீணாகி தினமும் நஷ்டம் அடைவது வேதனையாக உள்ளது. எனவே, மீண்டும் தற்காலிக மேற்கூரை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்" என்றனர்.