மக்களை சந்திக்க எங்களுக்குப் பயமில்லை; திமுகவைப் போல் ஓடி ஒளியமாட்டோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

மக்களை சந்திக்க எங்களுக்குப் பயமில்லை; திமுகவைப் போல் ஓடி ஒளியமாட்டோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
Updated on
1 min read

மக்களை சந்திக்க எங்களுக்குப் பயமில்லை; திமுகவை போல் நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கூட்டுறவுத் துறை சார்பாக 5 அம்மா நகரும் நியாய விலைக் கடை வாகனத்தை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், ‘‘எதிரிகளால் இந்த அரசைப் பற்றி குற்றம் கூற முடியவில்லை. அதனால் அவதூறு பரப்பி வருகிறார்கள். ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக தமிழகம் செயல்பட்டு வருகிறது, ’’ என்றார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "தமிழக மக்கள் எதையும் ஆராய்ந்து பார்க்கக் கூடியவர்கள். அது நாடே அறியும், மக்கள் முன்பு தைரியமாக ஓட்டு கேட்கிறோமே. இதுவே பெரிய சாதனை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசுதான் அதிமுக அரசு.

மற்ற கட்சிகள் அனைத்தும் கோட்டையில் இருந்து மக்களைப் பார்த்தார்கள். ஆனால் அதிமுக அரசு மக்களிடம் இருந்து கோட்டை பார்த்தது அதுதான் அதிமுக அரசு. நாளைக்கு மக்களை சந்திக்க எங்களுக்குப் பயமில்லை. மக்களின் வாக்குறுதியை நிறைவேற்றவே நாங்கள் இருக்கிறோம்.

திமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?.

அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் யாருக்காவது எந்த இடையறாது செய்தோமா?. திமுக காலத்தில் ஆறு மாதத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதிக்கு அவர் கேட்காமலேயே 20 நடமாடும் நியாய விலைக் கடை வழங்கி இருக்கிறோம். கரோன காலத்தில் உயிரை துச்சமாக நினைத்து மக்களோடு பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

திமுகவை போல் நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. எனக்கு கரோனா வந்த பிறகும்கூட குணமாகி மீண்டும் வந்து மக்கள் பணியில் ஈடுபட்டேன். திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவில்லை எங்களுடைய ஆட்சியில்தான் வழங்கப்படுகிறது.

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு எங்களுடைய ஆட்சியில் இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கி இருக்கிறோம். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாட்டில் கூட தங்கத்தை இலவசமாகத் தருவதில்லை. ஆனால், தமிழகத்தில் 6999 கிலோ தங்கம் இலவசமாக தங்கத்துக்கு தாலி திட்டத்தின் கீழ் கொடுத்துள்ளோம்"

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in