

தமிழகத்தில் உள்ள ஏராளமான மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அதை அரசு உடனடியாக அகற்றி மீண்டும் மார்க்கெட் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் உடனடியாக திறக்க கோரியும் சாத்தூரில் உள்ள அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் வணிக நிறுவனங்கள் அனைத்தும் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்க கோரியும் பட்டாசு கடைகள் அனைத்தும் நள்ளிரவு வரை திறந்து வைத்திருக்க அனுமதிக்க கோரியும் தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்க கோரியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் இன்று மனு கொடுத்தனர் .
அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "தமிழகம் முழுவதும் மார்க்கெட் இயங்காததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி மீண்டும் மார்க்கெட்டை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பட்டாசு தொழிலைக் காக்கவும் அனைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் தீபாவளி பண்டிகையையொட்டி நள்ளிரவு வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் துணை முதல்வரை சந்தித்துப் பேச உள்ளோம்" என்றார்.