Published : 01 Oct 2015 08:46 AM
Last Updated : 01 Oct 2015 08:46 AM

அண்ணா சாலை- மகாலிங்கபுரம் இடையே ரூ.290 கோடியில் புதிய மேம்பாலம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி

அண்ணா சாலை - மகாலிங்கபுரம் இடையே ரூ.290 கோடியில் மேம்பாலம் அமைக்க மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி பெறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மொத் தம் 62 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் ரூ.290 கோடியில் அண்ணா சாலையையும், மகா லிங்கபுரத்தையும் தற்போதுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் இரு கட்டங்களாக மேம்பாலம் அமைக்க அனுமதி கோரும் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

இதுபற்றி மேயர் சைதை துரைசாமி பேசும்போது, “இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அண்ணா சாலையில் இருந்து 2 நிமிடங்களில், எந்தவித போக்குவரத்து இடையூறும் இன்றி லயோலா கல்லூரியை சென்றடைய முடியும்” என்றார். கேள்வி- பதில் நேரத்தின்போது, கேள்வி பட்டியலில் தாங்கள் கொடுத்த கேள்விகள் இடம்பெற வில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது, திமுக மாமன்ற உறுப்பினர் நீலகண்டன், “மாமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மாமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று குரல் எழுப்பினார். இதைத் தொடர்ந்து அடுத்த 2 மன்ற கூட்டங்களில் அவர் பங்கேற்க தடை விதித்து மேயர் உத்தரவிட்டார்.

கேள்வி நேரத்தின்போது, மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வரியை நிர்ணயித்து வசூலிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கூச்சலிட்டார். மேயர் அறிவுறுத்தியும் அவர் அமைதி காக்காததால், அவரை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

முதல்வருக்கு பாராட்டு

செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்ததற்கா கவும், ரூ.1934 கோடியில் மேற் கொள்ளப்படும் கூவம் சீரமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற் காகவும், விதி எண்.110-ன் கீழ் சென்னை மாநகராட்சி மேம்பாட்டுக் காக பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேயர் சைதை துரைசாமி பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார்.

கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசும்போது, “இந்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மூலமாக ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 98 நகரங்களில் சென்னையும் ஒன்று. ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மாநகராட்சி இணையதளம் மற்றும் 15 இடங்களில் அமைந்துள்ள மண்டல அலுவலகங்கள் வைக்கப்பட்டுள்ள கருத்து கேட்பு பெட்டி ஆகியவற்றில் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x