Last Updated : 19 Oct, 2020 12:32 PM

 

Published : 19 Oct 2020 12:32 PM
Last Updated : 19 Oct 2020 12:32 PM

விருதுநகரில் விஸ்வரூபம் எடுக்கும் அதிமுக உட்கட்சி பூசல்: அமைச்சரிடம் இருந்து 6 மாதங்களாக கொலை மிரட்டல் வருவதாக சாத்தூா் எம்எல்ஏ ராஜவர்மன் பரபரப்பு புகார்

அமைச்சர் ஒருவரிடம் இருந்து 6 மாத காலமாக தனக்குக் கொலை மிரட்டல் வருவதாக சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ., ராஜவர்மன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டிவருவது விருதுநகர் அதிமுக உட்கட்சிப் பூசலை மேலும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருகிற 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.ராஜவர்மன் தலைமையில் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நகர ஒன்றியச் செயலாளா்கள் மற்றும் கட்சித் தொண்டா்கள் என 1000-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னா் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.ராஜவர்மன் , "நான் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருந்தது இல்லை. அவர்களாகத்தான் பதவியில் இருக்கச் சொன்னார்கள். இப்பொழுது கட்சி நிர்வாகிகள் முன்பே என்னைத் தரக்குறைவாக பேசுவதும் என்னை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவேன் என்று ஒரு அமைச்சரே 6 மாதமாக கொலை மிரட்டல் விடுத்துப் பேசி வருகிறார்.

கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்காலம். ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு அதிமுக என்ற கட்சியின் வெற்றிக்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். நான் இருக்கும் இடத்திற்க்கு விசுவாசமாக இருப்பேன்.

என்னை இந்த சாத்தூா் சட்டமன்ற தொகுதிக்கு முதல்வரும் துணை முதல்வரும் மக்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனாக வைத்து இருக்கிறார்கள்.

இந்த வேலைக்காரனைப் பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் என்னைத் தூக்கிஎறியுங்கள். நான் என்றுமே பொதுமக்களின் காலுக்கு செருப்பாக இருப்பேன்" என்றார்.

சாத்தூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் அமைச்சரின் ஆதரவாளர்கள் தரப்பில் நடைபெற்றது. இன்று சட்டமன்ற உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.இராஜவர்மன் அணியினா் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சா் அணி மற்றும் எம்.எல்.ஏ அணி என இரு பிரிவாக சாத்தூா் பகுதியில் அதிமுகவினா் செயல்பட்டு வருவதால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x