Published : 19 Oct 2020 11:20 AM
Last Updated : 19 Oct 2020 11:20 AM

முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு: தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்

முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலையில் சந்தித்தார். முதல்வரின் தாயார் மறைவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். உடனடியாக சொந்த ஊர் சென்ற முதல்வர் பழனிசாமி தாயார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வரின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசு துணைத் தலைவர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்திருந்தார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

தாயார் மறைவுக்குப் பின் முதல்வர் பழனிசாமி சென்னை திரும்பவில்லை. அதிமுக ஆண்டு விழாவைக் கூட சேலத்தில் கொண்டாடினார். இந்நிலையில் நேற்றிரவு முதல்வர் பழனிசாமி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவரை திமுக தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு வந்து இன்று சந்தித்தார். அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர் இருந்தனர்.

முதல்வர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வரிடம் பேசிய ஸ்டாலின், அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x