

மணிக்கு 130 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லும் விரைவு ரயில்களில் ஏசி பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும் என்ற புதிய முடிவை ரயில்வே கைவிட வேண்டுமென எஸ்ஆர்எம்யு கண்ணையா தெரிவித்துள்ளார்.
மணிக்கு 130 கி.மீக்கும் கூடுதல்வேகத்தில் செல்லும் விரைவு ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் ஏசி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. ஏற்கெனவே, நாட்டில் தற்போதுள்ள வழித்தடங்களில் இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் பெரும்பாலும் ஏசி பெட்டிகள்தான் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மணிக்கு 130 கி.மீக்கும் கூடுதல்வேகத்தில் செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும் சாதாரண முன்பதிவு பெட்டிகள் இடம் பெறாது எனகூறியிருப்பதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக எஸ்ஆர்எம்யு பொதுச்செயலர் கண்ணையா கூறும்போது, ‘‘மத்திய அரசு ரயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சியில் வேகமாக செயல்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் மக்கள் வருமானம்இன்றி தவித்து வருகின்றனர். தற்போதுஇயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் பல வகையான சலுகை கட்டணங்கள் மறுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளை குறைத்து, ஏசி பெட்டிகளை அதிகரித்து இயக்குவது சாதாரண, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே, 130 கி.மீக்கும் மேல் வேகமாக செல்லும் விரைவு ரயில்களில் ஏசி பெட்டிகளை மட்டுமே இணைத்து இயக்கும் முடிவை ரயில்வே கைவிட வேண்டும்’’என்றார்.