Published : 19 Oct 2020 07:14 AM
Last Updated : 19 Oct 2020 07:14 AM

தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களில் 3,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க திட்டம்: தேர்வாணையம் மூலம் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் 109 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில்,மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அரசு கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மோகம் குறைவதுமற்றும் போட்டித் தேர்வில் கலந்துகொண்டு அரசு வேலைகளில் சேர விரும்பும் மாணவர்களால் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. இதனால், கலை, அறிவியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 3 ஆண்டுகளாக 20 சதவீதம் கூடுதல்இடங்களுக்கு அரசு அனுமதித்துவருகிறது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 535 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல, 4 ஆண்டுகளில் 22 புதிய கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அரசு கல்லூரிகளுக்கு ஆசிரியர் தேவையும்அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, அரசு கல்லூரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு உதவிபேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக, காலி பணியிடங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாகவழங்கப்படுகிறது. இதற்கிடையே, அரசு கல்வியியல் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் சமீபத்தில்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிபேராசிரியர்கள் பணியிடத்தில் மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்கள், ஆசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் விவரத்தை கல்லூரி கல்விஇயக்ககம் அவசரமாக கேட்டுள்ளது.

ஏற்கெனவே, அரசு கல்லூரியில் தரமில்லை என பொதுவெளியில் மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். இதனால், தங்களின் பிள்ளைகளை அரசு கல்லூரியில் சேர்க்க தயங்கிவருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரும் முறையாக பாடம் எடுக்க மாட்டார்கள் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அரசு கல்லூரியில் பணிபுரியும் ஒரு உதவி பேராசிரியர் குறைந்தது ரூ.50 ஆயிரத்துக்குமேல் சம்பளம்வாங்குகிறார். ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு, அவரதுபணியை செய்யும் கவுரவ விரிவுரையாளர்கள், வேண்டாவெறுப்பாக பாடம் நடத்த தொடங்கி விடுகிறார்கள்.

எனவே, மீண்டும் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கும் எண்ணத்தை கைவிட்டு, காலிப் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப அரசு முன்வர வேண்டும். அதில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய சலுகை மதிப்பெண்ணை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x