Published : 19 Oct 2020 07:10 AM
Last Updated : 19 Oct 2020 07:10 AM

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் பின்னடைவு; 10 பேர் புகைப்படங்கள் அடையாளம் தெரியவில்லை: ஆதார் ஆணைய அறிவிப்பால் திணறல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்செய்து மருத்துவக் கல்லூரிகளில் பலர் சேர்ந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேனி அரசுமருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவரும், அவரது தந்தையும் முதலில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் தொடங்கிய விசாரணை நீண்டுகொண்டே போனநிலையில், இதுவரை 5 மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஒருஇடைத் தரகர் என 12 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்து வந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துதேர்வு எழுதியதாக 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீஸார் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி வெளியிட்டனர். அவர்களது பெயர், முகவரி குறித்து விவரம்தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

இதில் முக்கிய இடைத் தரகராக செயல்பட்ட ரசீத் என்பவரையும் சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அந்த 10 பேரையும், இடைத் தரகர்களையும் சிபிசிஐடியால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.

இதற்கிடையில், 10 பேரின்புகைப்படங்களையும் பெங்களூருவில் உள்ள ஆதார் ஆணையத்துக்கு சிபிசிஐடி போலீஸார் அனுப்பிவைத்து, அவர்கள் குறித்த விவரங்களை கேட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த 10 புகைப்படங்கள் குறித்து ஆய்வு செய்ததில், அவர்கள் குறித்த எந்த விவரமும் கிடைக்கவில்லை என்றுஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இது விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆள்மாறாட்ட வழக்கு கடந்த 2019 செப்டம்பர் 23-ம் தேதி தேனி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது 2020-ம் ஆண்டு நீட் தேர்வு முடிந்தும்கூட, முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x