கரோனா பரவலால் தொழிலில் நஷ்டம்; மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றேன்: உயிர் பிழைத்த கணவன் வாக்குமூலம்

கரோனா பரவலால் தொழிலில் நஷ்டம்; மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றேன்: உயிர் பிழைத்த கணவன் வாக்குமூலம்
Updated on
1 min read

சென்னை திருவிக நகர் அடுத்த வெற்றி நகர், ராமசாமி தெருவில் வசிப்பவர் பழனி (47). இவரது மனைவி பவானி (40), மகள் தேவதர்ஷினி (17), மகன் பிரகதீஸ் (11). நேற்று முன்தினம் மதியம்வரை அவர்களது வீடு மூடியே இருந்தது. வீட்டில் இருந்து யாருமே வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, படுக்கைஅறை கட்டிலில்தாய், மகள், மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குடும்பத் தலைவரான பழனி, 2-வது மாடியில் உள்ள அறையில், கை அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பழனிக்கு நேற்று மயக்கம் தெளிந்து, நினைவு திரும்பியது. இதையடுத்து, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

“ஹார்டுவேர் தொழில் செய்து வந்தேன். கரோனா பரவலால் தொழிலில்நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, நானும்தற்கொலைக்கு முயன்றேன்” என்று அவர் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை முயற்சிக்கு கடன் பிரச்சினைதான் காரணமா, வேறு ஏதும் பிரச்சினையா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in