

ரத்தநாள நோய் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வரும் 10-ம் தேதி சென்னையில் நடக்கிறது என்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை இதய சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் ச.தணிகாசலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
இந்தியாவில் நோய்களால் பாதிக்கப்பட்டு செயல்திறன் இழந்தவர்கள், இறந்தவர் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதற்கு தொற்றுநோய் அல்லாத ரத்தநாள நோய்களின் பாதிப்பு முக்கிய காரணமாக உள்ளன. மாரடைப்பு 16 சதவீதம், பக்கவாதம் 7 சதவீதம், கால்களில் ரத்தநாளங்களின் பாதிப்பு 16 சதவீதம் என்ற அளவில் காணப்படுகின்றன. இதற்கெல்லாம் மூலகாரணம் ரத்தநாள நோய்தான். மக்களி டையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், ரத்தநாள நோயை தடுக்க முடியவில்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ரத்தநாள நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதனை உணர்ந்த ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம் மக்களும், மருத்துவரும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ள வழிவகுக்கும் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டது. அந்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை மியூசிக் அகாடமியில் வரும் 10-ம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், யுனை டெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளர் கிரிஜாகுமார், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் கலந்து கொள்கின்றனர். பங்கேற்க விருப்பமுள்ள பொதுமக்கள் 9994283858 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தணிகாசலம் தெரிவித்தார்.