

அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை, ஏளிய மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 18) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துக் கல்லூரியில் படிப்பதற்காக, அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இச்சூழலில் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கதக்கது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால், அதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும்.
எனவே, தமிழக அரசின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.