

மருத்துவ உயர் சிறப்புப் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 18) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவ சேவைகளில் முதல் மாநிலமாக இருந்து வருவது தமிழ்நாடு ஆகும். இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலமும் தமிழ்நாடே!
சமூகநீதி மண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!
சமூகநீதி மண்ணான, தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின்மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முதல் தலைமுறையாகக் கல்விக் கண்பெற்ற கிராமப்புறத்தைச் சார்ந்தோர், மருத்துவர்களாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தக் கரோனா காலத்தில் இரவு பகலாக தமிழக மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இத்தகைய தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு வரை உயர் சிறப்பு மருத்துவப் பட்டப் படிப்பில் இருந்து வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நீட் தேர்வைப் பொருத்தமில்லாமல் காரணம் காட்டி மத்திய பாஜக ஆட்சி ஒழித்துக் கட்டியது.
இதன் காரணமாக ஏற்பட்ட விளைவு என்ன?
இருதய உயர்படிப்பில் 74 இடங்களில் 18 பேரும், சிறுநீரகப் படிப்பில் 47 இடங்களில் 2 பேரும், புற்றுநோய்ப் படிப்பில் 18 இடங்களில் ஒரே ஒருவரும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால், இந்தத் துறைகளுக்கு வெளிமாநிலங்களை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கும் பரிதாபம்தான் மிஞ்சும்.
கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் கம்பீரமாகக் கோலோச்சிய மாநிலம் கடைசி மட்டத்திற்குத் தள்ளப்பட்டுவிடும்.
மருத்துவ உயர்சிறப்புக் கல்வியில் நடைமுறையில் இருந்துவந்த 50 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானதே, அவர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
சமூகநீதி எதிர்ப்பில் பித்துப் பிடித்து அலையும் பாஜக அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நேற்று முன்தினம் (அக். 16) மத்திய அரசின் சார்பில், உயர் சிறப்புப் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் உதாசீனம் செய்து தூக்கி எறியும் அளவுக்கு சமூகநீதி எதிர்ப்பு என்பதில் மத்திய பாஜக அரசு பித்துப் பிடித்து அலைவதாகத் தெரிகிறது.
தமிழகத்திலிருந்து அளிக்கப்பட்ட மத்திய மருத்துவத் தொகுப்புக்கான இடங்களிலும் இடஒதுக்கீடு அறவே அளிக்க முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் அலட்சியப்படுத்தும் நிலைக்குச் சென்றுவிட்டது மத்திய பாஜக அரசு.
உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் எத்தனை வேகம்
அதேநேரத்தில், உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற பெயரால் சட்ட விரோதமான செயலில் அவசர அவசியமாகக் கருதி, உடனே செயல்படுத்தியும் விட்டது.
பாஜக அரசு என்றால், பாசிச ஆட்சி என்பதற்கு இவற்றைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.
இந்து - இந்து அல்லாதார் என்று ஒருபக்கத்தில் கூறிக்கொண்டு, அவர்களின் வாக்குகளை மதத்தின் அடிப்படையில் பறிக்கும் சூழ்ச்சி ஒரு பக்கம்.
இந்து மதத்தில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரை சமூகநீதியில் வஞ்சிக்கும் சூழ்ச்சி இன்னொரு பக்கமா?
மத்திய பாஜகவின் இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது ஒன்றுபட வேண்டிய நேரம் இது!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.