Published : 18 Oct 2020 12:24 pm

Updated : 18 Oct 2020 12:24 pm

 

Published : 18 Oct 2020 12:24 PM
Last Updated : 18 Oct 2020 12:24 PM

அதிமுக அரசு கரோனாவை வைத்து புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது: ஸ்டாலின் விமர்சனம்

mk-stalin-slams-aiadmk-government
திருமண விழாவில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற ஸ்டாலின்.

சென்னை

உலகமே கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அதிமுக அரசு மட்டும் கரோனாவை வைத்து புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (அக். 18), புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரனின் இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர், அவ்விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:

"கரோனா காலத்தைப் பயன்படுத்திக் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும் தான் கரோனாவை வைத்து புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதிலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறாரே, அவரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பரிசோதனைக் கருவியிலேயே ஊழல் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து, கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார். ஊழலையே திருமணம் செய்துகொண்டு, ஊழலுடனேயே இல்லறம் நடத்தி, ஊழல் குழந்தைகளைக் கட்டுப்பாடின்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி!

அவர்களின் இந்த ஊழல் தேனிலவு, ஊழல் குடித்தனம் எல்லாம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அதன்பிறகு, புதுக்கோட்டை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். தமிழ்நாட்டுக்கு புதிய வெளிச்சம் பிறக்கும்!

பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டில் இருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காணத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவோர் இரண்டு தரப்பினர் மட்டும்தான். ஒன்று பழனிசாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு, எடப்பாடி பழனிசாமியையும் அவருடைய கொள்ளைக் கூட்டத்தையும் இயக்கி வரும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள்.

ஏனென்றால், தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்தால்தானே, நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களுடைய மருத்துவக் கனவைத் தகர்த்து, கோச்சிங் சென்டர் எனும் பெயரில் அவற்றை நடத்தும், தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தைச் சம்பாதிக்க முடியும்!

இதோ இந்த மணமேடையில் அமர்ந்திருக்கின்ற மணமக்கள் இருவருமே பி.இ. படித்திருக்கிறார்கள். அதுபோல பல்லாயிரம் பொறியாளர்களை உருவாக்கிய பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்து எனச் சொல்லி, அதனை அபகரிக்க முடியும்.

வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துத் தங்களுக்கு வேண்டியவர்கள் கைகளில் நிலங்களை ஒப்படைக்க முடியும். மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொள்ள முடியும்.

ஊழல் எனும் பெயரில் அதிமுக அமைச்சர்கள் தொடங்கி, தலைமைச் செயலகம் வரை ரெய்டு நடத்தி, அதைக் காட்டி மிரட்டியே, தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்ள முடியும். இதுபோன்ற மோசடி வேலைகள் நடப்பதற்கு இருட்டுதானே வசதி. அதனால்தான், இந்த இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என்று மத்தியில் இருப்பவர்கள் விரும்புகிறார்கள்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் வழங்கப் போகும் தீர்ப்பை எவராலும் மாற்ற முடியாது. தெளிவான தீர்ப்பை திடமான தீர்ப்பை உறுதியான தீர்ப்பை உதயசூரியனுக்கு ஆதரவான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள்.

அதைச் சிந்தாமல், சிதறாமல் ஒருங்கிணைத்துப் பெற வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழகம், பேரூர்க் கழகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. உங்களில் ஒருவனான நான் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் சுமந்திருக்கிறேன்.

இந்த இயக்கத்தைப் பார்த்து, குடும்பக் கட்சி என்று சொல்பவர்களுக்கு, இந்த கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான் என்று பதில் சொல்கின்ற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் குவாரி காண்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது. கரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி. நாம் திமுககாரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தவறவிடாதீர்!

திமுகமு.க.ஸ்டாலின்அதிமுககரோனா வைரஸ்கொரோனா வைரஸ்DMKMK stalinAIADMKCorona virusPOLITICS

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x