

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி, காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மேல் கொடிப்பட்டம் கொண்டு வரப்பட்டது. 10.45மணிக்கு கோயில் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து கொடி மரத்துக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து ஷோடச தீபாராதனை நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும். இதையொட்டி அன்று காலை 10.15 மணிக்கு அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்வார்.
27-ம் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும். கோயிலில் அக்டோபர் 27-ம் தேதி கொடியிறக்கப்பட்டவுடன் வேடமணிந்த பக்தர்கள் தங்கள் ஊரில் உள்ள கோயில்களில் வைத்து காப்பு களையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.