

இந்தி - சமஸ்கிருத திணிப்புகளை எதிர்த்து எவ்வித தியாகப் போராட்டங்களையும் நடத்திட தயாராக இருப்பதாக, திமுக மாணவர் அணி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தி பேசுபவர் மட்டுமே இந்தியர் என்று மத்திய அரசு கருதி செயல்படுகிறது. இந்தி படித்தால் வேலைக்கு போகலாம். இந்தி படித்தால்தான் வாழ்வு. திராவிட இயக்கங்கள்தான் கெடுத்து விட்டன என்று பேசியும் எழுதியும் வருகின்ற தேசிய மொழியாக இந்தியை ஏற்றுக்கொண்ட இந்தியாவின்
வளர்ச்சிக்கு எதிரானவர்களின் கூற்றுகள் பொய்யாகி போயின. வடநாட்டில் வேலையின்றி தமிழகத்தில் பணிப்புரிய பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் வருகின்றனர்.
சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களுக்கு இந்தி வெறி பிடித்துள்ளதால் தங்கள் தாய் மொழியை தகுதிக்கு மீறி வளர்த்திட துடிக்கின்றனர். பா.ஜ.க. என்பதே சமஸ்கிருதத்தின் அடிமைகள் வாழ்விடம் என்பதை தமிழகம் அறியும். இந்தி அதன்பின் சமஸ்கிருதம் என பண்பாட்டு சீரழிவு படையெடுப்பை கொஞ்சம், கொஞ்சமாக இந்துத்துவவாதிகள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் திட்டமிட்டு செயல்படுத்திட முனைந்துள்ளார்கள்.
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை போற்றி விழாக் கொண்டாடும் பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற கூட்டங்களின் விருப்பங்களை நரேந்திர மோடி அரசு நிறைவேற்ற விழைவது, திரைமறைவில் இந்தியாவில் வன்முறை தாண்டவமாட மதரீதியாக, இனரீதியாக, மொழிரீதியாக தூண்டிவிட வெறியுடன் சிலக் குழுக்கள் கிளம்பியுள்ளன. அவற்றின் விருப்பத்தை மோடி அரசு நிறைவேற்ற கிளம்புவது அவர்களின் மோசமான செயல்களுக்கு ஆதரவாக இருப்பதின் வெளிப்பாடுதான் சமஸ்கிருத, இந்தி மொழித் திணிப்பு.
வேடமிட்டு எவர் வந்தாலும், எது வந்தாலும், தலைவர் கருணாநிதியின் திராவிடப் பார்வையில் இருந்து தப்ப முடியாது. கருணாநிதியின் அறிவுரையை ஏற்று நடப்பது மத்திய அரசுக்கு நல்லது.
நாட்டை நாசமாக்கிடும் பணியாக உள்ள மொழித் திணிப்புகளை, ஐ.நா.வில் சுமார் 300 கோடி செலவில் இந்தியை அலுவல் மொழியாக்கிடும் துடிப்புகளை, இந்தியாவின் ஒற்றுமையைக் கெடுக்கின்ற இப்படிப்பட்ட வேலைகளை நிறுத்திட வேண்டும்.
1938-ல் தொடங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்பு போர் உணர்வு இன்றும் பட்டுப் போய்விடவில்லை. மொழிப் போர்க்களத்தில் தன் பொதுவாழ்வை மாணவப் பருவத்தில் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதி ஆணையிட்டால், திமுக பொருளாளர் ஸ்டாலின் வழிக்காட்ட மிகப்பெரும் ஆர்ப்பாட்ட போராட்டங்களை தொடர்ந்து தி.மு.க. மாணவர் அணி செய்திட தயாராக உள்ளது.
தேவையெனில் கருணாநிதியின் அனுமதி பெற்று, ஸ்டாலினின் ஆலோசனைப் பெற்று பா.ஜ.க. மற்றும் அக்கட்சிக்குப் பல்லக்குத் தூக்கும் அதிமுக அரசையும் கண்டித்து சிறை செல்லும் போராட்டத்தினை செய்திட, தாய்மொழி தமிழைக் காத்திட, இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்த்து எவ்வித தியாகத்தையும் செய்திடவும், தி.மு.க. மாணவர் அணி போர்ப் பரணிப் பாடிட எழுச்சியுடன் இருக்கிறது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று அவர் கூறியுள்ளார்.