Published : 18 Oct 2020 07:37 AM
Last Updated : 18 Oct 2020 07:37 AM

பொன்விழா ஆண்டிலும் அதிமுக ஆட்சி நூற்றுக்கு நூறு வெற்றி என்ற இலக்குடன் செயல்படுவோம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அழைப்பு

சென்னை

அதிமுகவின் பொன்விழா ஆண்டிலும் ஜெயலலிதாவின் அரசே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம் என்று கட்சித் தொண்டர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது நீங்காத அன்புகொண்டு, அதிமுகவை வேர்களாகவும், விழுதுகளாகவும் கட்டிக்காக்கும் அன்புத் தொண்டர்கள்அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுகட்சியே கோயில் என்றும், ஜெயலலிதாவே தெய்வம் என்றும் வணங்கிடும் அன்புத் தொண்டர்கள், அவரின் சூளுரைப்படி பல நூறாண்டுகள் அதிமுக நிலை பெற தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் நல்கிட உறுதி பூண்டு வழிநடத்தும் இந்த இயக்கம், 48 ஆண்டுகள் கடந்து 49-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கழகத்தின் மீது நம்பிக்கையுடன் இருந்தால் தலைமையின் மீது விசுவாசத்துடன் இருந்தால் கடைக்கோடி தொண்டரும் கழகத்தைவழிநடத்தும் ஒருங்கிணைப்பாளராக முடியும், அரசுக்கு தலைமையேற்கும் முதல்வராக முடியும் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ள இயக்கம் நம் இயக்கமாகும். இந்த இயக்கத்தை ஆட்சி பீடம்ஏற்றியவர் எம்ஜிஆர். அவரது பாதையில் பொற்கால ஆட்சி தந்து புகழ் படைத்தவர் ஜெயலலிதா. அந்த இருபெரும் தலைவர்களின் பாதையில், அவர்கள் நமக்கு கற்றுத்தந்த பாடங்கள், படிப்பினைகளின் வழி நின்று கழகத்தையும், அரசையும் வெற்றி நடைபோட செய்து, மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று, அவர்கள் இதயத்தில் நீங்கா தனியிடத்தை பெற்றுள்ளோம்.

இன்று நமது எண்ணங்களில் நிறைந்திருக்கும் சொல் ஒன்றுதான். அதுதான் வெற்றி. நாம் மேற்கொள்ள வேண்டிய செயல் வெற்றிக்குப் பாடுபடும் உழைப்பு மட்டும்தான். ஜெயலலிதா சூளுரைத்தபடி இந்த இயக்கத்தை இன்னும் நூறாண்டுகள் நிலைபெறச் செய்ய வேண்டும். அவரின்அறிவுரைப்படி மக்கள் பணி செய்ய எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுகவை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதை நிறைவேற்ற ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் நேர் வழி நின்று ஓர்வழிசென்றால் நாளை நமதே’ என்றுஎம்ஜிஆர் பாடியதை நினைவில்கொண்டு, நூற்றுக்கு நூறு வெற்றிஎன்ற இலக்குடன் செயல்படுவோம். அதிமுகவின் பொன்விழா ஆண்டிலும் ஜெயலலிதாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x