Published : 18 Oct 2020 07:20 AM
Last Updated : 18 Oct 2020 07:20 AM

அரசு ரூ.3.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் ஆதம்பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணியில் மெத்தனம்: கனமழை தொடங்கும் முன்பு சீரமைக்க மக்கள் கோரிக்கை

சென்னை

தமிழக அரசு ரூ.3.48 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், சென்னை ஆதம்பாக்கம் ஏரியை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன. கனமழை தொடங்குவதற்கு முன்பு ஏரியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள பழவந்தாங்கல், நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளின் நீராதாரமாக இருந்ததுதான் ஆதம்பாக்கம் ஏரி. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 100 ஹெக்டேர் அளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருந்தது. அப்போதெல்லாம், இதை சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வளவு கனமழை பெய்தாலும், அந்த நீர் முழுவதும் இந்த ஏரியில் வந்து சேர்ந்துவிடும். ஆனால், ஏரியின் பரப்பு படிப்படியாக குறைந்து, தற்போது 13 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. இதனால், சாதாரண மழைக்கே சுற்றுப் பகுதிகள் வெள்ளக்காடாகி விடுகின்றன.

இதற்கிடையே, சென்னை புறநகர் பகுதியான ஆதம்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல் ஏரிகளை அழகுபடுத்தவும், 10 சதவீதம் ஆழப்படுத்தவும் தமிழக அரசு ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளது. அதன்படி, பெரும்பாக்கம், வேங்கைவாசல் ஏரிகளில் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆதம்பாக்கம் ஏரியை தூர்வாரி சீரமைக்கவும் ரூ.3 கோடியே 48 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சபரி பசுமை அறக்கட்டளை தலைவர் வி.ராமாராவ், செயலர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:

நிலத்தடி நீர்மட்டம்

ஆதம்பாக்கம் ஏரியை அரசு உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, ஏரியை சீரமைக்க கடந்த ஜனவரியில் ரூ.3.48 கோடியை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இன்னும் பணிகள் முழு வீச்சில் நடக்காமல் இருக்கின்றன. ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்களை சீரமைக்காததால், ஏரிக்கு போதிய நீர் செல்வதில்லை. ஆங்காங்கே குட்டைபோல மழைநீர் தேங்குகிறது. எனவே, இந்த ஏரியை சீரமைத்தால், மழைநீரை சேமிப்பதோடு, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக ஆலந்தூர் திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் கூறும்போது, ‘‘ஆலந்தூர் தொகுதியில் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பல்வேறு பணிகள் இன்னும் முழு அளவில் தொடங்கப்படவில்லை. குறிப்பாக, ஆதம்பாக்கம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதன்படி, அரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டால் சில மாதங்களிலேயே முடித்துவிடலாம். எனவே, கனமழை தொடங்குவதற்கு முன்பே அடிப்படை சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x