Published : 17 Oct 2020 20:12 pm

Updated : 17 Oct 2020 20:12 pm

 

Published : 17 Oct 2020 08:12 PM
Last Updated : 17 Oct 2020 08:12 PM

34 வயதானாலும் மனதால் குழந்தையாய் வளர்ந்த மகன்: எச்சரிக்கையாக இருந்தும் கரோனாவுக்கு மகனைப் பறிகொடுத்த மா.சுப்பிரமணியம் தம்பதியின் துயரம்

34-year-old-mentally-retarded-son-tragedy-of-ma-subramaniam-couple-who-lost-their-son-while-trying-to-avoid-corona-infection

சென்னை

மாற்றுத்திறனாளியாக, மனதால் குழந்தையாக 34 ஆண்டுகள் இருந்த தனது மகனின் மறைவு குறித்தும், தனது பொது வாழ்வுக்குப் பாதிப்பு வராமல் மனைவி பார்த்துக்கொண்டதையும் மா.சுப்பிரமணியம் நினைவுகூர்ந்துள்ளார்.

தங்களுக்கு வந்த கரோனா தொற்று மகனுக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்தும், கடைசியில் கரோனா பாதித்து மகனின் உயிரைப் பறிக்கும் நிலைக்குக் கொண்டுசென்று விட்டது குறித்தும் மா.சுப்பிரமணியம் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மா.சுப்பிரமணியம் சார்பில் அவரது அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திப் பகிர்வு:

“சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியம் - காஞ்சனா சுப்பிரமணியம் ஆகியோரின் இளைய மகன் மா.சு.அன்பழகன் ( 34) நேற்று (அக்.17) காலை மறைவுற்றார் என்ற செய்தி அறிவிக்க வருந்துகிறோம்.

மாற்றுத்திறனாளியான மா.சு.அன்பழகனை 34 ஆண்டுகளாக பராமரித்து வந்த பெற்றோரின் நினைவனைகள் சில:

ஒரு பெண் நல்ல திடகாத்திரமான, குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதென்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இயல்புதான். அதில்தான் மனித வாழ்க்கையே கடந்து செல்கிறது. ஆனால் 34 ஆண்டுகளுக்கு முன்பு தான்பெற்ற குழந்தை ஒரு மாற்றுத்திறனாளியாய் பிறந்தும், அக்குழந்தை மாற்றுத்திறனாளி குழந்தை என்ற எண்ணம், தம் எண்ணத்திலும் சரி, அவரது கணவர் சிந்தனையிலும் சரி, கடுகின் கால்முனையளவுகூட எண்ணாமல், 34 ஆண்டுகளுக்கு முன்பு தம் குழந்தையை எப்படி பெற்றெடுத்தாரோ, அதே போல் 34 ஆண்டுகளுமே குழந்தையாகவே பாவித்து, பேணிப் பாதுகாத்துவந்து, தாய்மைக்கோர் முன்னுதாரணமாக திகழ்பவர்தான், தற்போதைய சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியனின் துணைவியார் காஞ்சனா.

மா.சுப்பிரமணியனின் மூத்த மகன் மருத்துவர் மா.சு.இளஞ்செழியன் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இலண்டனில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியாய் பிறந்த தமது மகன் மா.சு.அன்பழகன் படுத்த படுக்கையாகவே இருந்து வந்த நிலையில், தாய், தந்தை, அண்ணன் மட்டுமல்லாமல், அவரை தினந்தோறும் காணும் சிலரையும் அடையாளம் கண்டு சிரிப்பது, கைகாட்டுதல், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல், அம்மா, அப்பா என்று அழைத்தல் இதை மட்டுமே செய்யக்கூடியவர்.

ஆகையால் அவரை காலை 6 மணி தொடங்கி குளிப்பாட்டுதல், புத்தாடை அணிவித்தல், மூன்று வேளையும் உணவு, தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குதல், பிசியோதெரபி பயிற்சி செய்ய வைத்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வைத்தல் போன்ற பணிவிடைகளைச் செய்து முடித்து தாம் படுக்கைக்குச் செல்வதற்கு இரவு 11 மணியாகிவிடும்.

34 வயதுக் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தி, தாமும் அதில் இன்புறுவார். அதிலும் ரஜினி படங்கள் என்றால் இன்னும் குதூகலமாகிவிடுவாராம் மா.சு.அன்பழகன். இச்சுகமான பணியால், தமது காலை சிற்றுண்டியையே தினந்தோறும் நண்பகல் 12 மணிக்குத்தான் சாப்பிடுவார். மதிய உணவை 3 மணிக்குத்தான் சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டவர்.

இதற்காகவே வெளிப் பயணங்களை அறவே ஒதுக்கி வைத்துவிட்டு தமது மகனைப் பராமரிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, தமது நேரத்தைச் செலவிட்டவர். தமது கணவர் (மா.சுப்பிரமணியம்) மக்கள் பிரதிநிதியாக இருந்த காரணத்தால், வீட்டு நிர்வாகம் அனைத்தையும் தாம்மேற்போட்டுக்கொண்டு செயலாற்றினார். அதனால் மக்கள் பணியைச் செவ்வனே செய்துவந்தார் மா.சு.

ஆனால் உலகமே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சொற்படி சுற்றி, சுற்றி வந்து பணியாற்றிவந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மா.சுப்பிரமணியம், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று நலம்பெற்றனர். ஆனால் அத்தொற்று தமது இளையமகன் மாற்றுத்திறனாளியான சு.அன்பழகனுக்கு பற்றி விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வந்தனர்.

ஆனால், அத்தொற்று மா.சு.அன்பழகனுக்கும் தொற்றிக்கொண்டது. அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.17) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்ற துயரச் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைவுச் செய்தி அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மற்றும் திமுகவினர், பல்துறையினரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியம் அவரது மனைவி காஞ்சனா சுப்பிரமணியம் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

34-year-old mentally retarded sonTragedyMa Subramaniam coupleWho lost their sonWhile trying to avoid corona infection34 வயதானாலும் மனதால் குழந்தையாய் வளர்ந்த மகன்கரோனா தொற்று பாதிக்காமல் பார்க்க முயன்றும்மகனை பறிகொடுத்த மா.சுப்ரமணியம் தம்பதிதுயரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author