Published : 17 Oct 2020 07:47 PM
Last Updated : 17 Oct 2020 07:47 PM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக வைகை வடகரையில் 40 ஆண்டுகள் பழமையான மரம் வெட்டி அகற்றம்: வாழ்விடங்களை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் வசித்த பழமையான மரத்தை வெட்டியதைg கண்டித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடப்பதைத் தடுக்கg கோரியும் வாழ்விடங்களை இழந்த பறவைகளின் கூடுகளுடன் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரண்டு வந்தது பரபரப்பபை ஏற்படுத்தியது.

மதுரையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடக்கின்றன. இதில் ஒரு பகுதியாக வைகையாற்றின் இரு புறமும் நெடுஞ்சாலைத்துறை குறிப்பிடப்பகுதியும், மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குறிப்பிட்டப்பகுதியும் பிரம்மாண்ட சாலைகள் அமைத்து வருகின்றன.

இந்த சாலை பணிக்காக வைகைக் கரையோரம் இருந்த பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே வைகை ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு என்று கூறி கடந்த ஆண்டு சமூக ஆர்வலர்கள் நட்டிருந்த ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை அப்புறப்படுத்தினர்.

அதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனாலும், அரசு துறை அதிகாரிகள் அசாமல் வளர்ச்சித்திட்டப்பணிளுக்காக மரங்களை கொத்து கொத்தாக வெட்டி அகற்றி வருகின்றனர்.

மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஒரு புறம் ஏற்பட்டாலும் அந்த மரங்களை நம்பி கூடு கட்டி வசித்து வந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வாழ்விடங்களை இழந்து இடம்பெயர்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று வைகை வடகரை ஷா திரையரங்கின் அருகே 40 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் இன்று வெட்டப்பட்டது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் கூடு கட்டி வசித்து வந்தன.

அந்தக் கூடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு தொழிலாளர்கள் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மரங்களை அவசியம் இல்லாமல் வெட்டக்கூடாது என்றும், அப்படியே வெட்டினாலும் அதை இடப்பெயர்ச்சி செய்து வேறு இடத்திற்கு கொண்டு போய் நட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

ஆனால், நகர்ப்பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் என்ற போர்வையில் அதிகாரிகள் மரங்களை இரக்கமில்லாமல் வெட்டி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், இந்த நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட சமூக ஆர்வலர்கள் பலர், வைகை வடகரையில் வெட்டப்பட்ட மரத்தில் வசித்த பறவைகளின் கூடுகளை எடுத்துக் கொண்டு மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீர்நிலை அபூபக்கர், உள்ளவிதைப்பந்து அசோக்குமார் பெருமாள் மற்றும் பிரியா உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி வருவாய் ஆய்வாளர் இப்ராகிம் சேட் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து சாலைக்கு இடையூறு இல்லை என்றால் மரத்தை அவ்விடத்திலேயே பராமரிப்பது என்றும் இல்லாவிடில் அதனை அப்படியே பெயர்த்தெடுத்து செல்லூர் கண்மாய் கரையில் நட்டு வைக்க உறுதியளித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x