

ஆவின் பெண் பணியாளர்கள் அளிக்கும் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக பால்வளத்துறை இயக்குனர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் ஆவின் இளநிலை உதவியாளர் சுசிலா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆவின் அதிகாரி கிறிஸ்துதாஸ் எனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். அதை எதிர்த்ததால் பல்வேறு வழிகளில் இடையூறு அளித்து வருகிறார். ஒரே ஆண்டில் 4 முறை குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதனால் எனக்கு பதவி உயர்வு தாமதமாகி வருகிறது.
எனக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எனது பாலியல் புகார் தொடர்பாக விசாகா குழு (பணியிடங்களில் பாலியல் தொந்தரவு குறித்து விசாரிக்கும் குழு) விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆவின் பெண் பணியாளர்களின் பாலியல் புகார்களை விசாரிக்க ஆவினில் விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா? குழு அமைக்கப்பட்டிருந்தால் விசாகா குழு பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பால்வளத்துறை இயக்குனருக்கு அதிகாரம் உள்ளதா? இது குறித்து ஆவின் பால்வளத்துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.