

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி சொந்த கிராமத்தில் கட்சிக் கொடியை ஏற்றி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துக்கு மலூர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று (அக். 17) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சித் தொண்டர்கள் கட்சியின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை ஒன்றியம், பேரூர், நகராட்சி, மாநகரப் பகுதியில் கொடி ஏற்றி, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி இன்று தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் 49-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று, கட்சிக் கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக, முதல்வர் பழனிசாமி விழா மேடையில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், அம்மா பேரவை மாவட்டத் தலைவர் மாதேஷ், எடப்பாடி தெற்கு ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரன் உள்பட சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.