Published : 17 Oct 2020 04:02 PM
Last Updated : 17 Oct 2020 04:02 PM

கூட்டாண்மை படிப்புகள்; பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக வழி வகுக்கக்கூடாது: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

பல்கலைக்கழகங்களில் தனியார் நிறுவனங்கள் படிப்புகளை நடத்துவதை ஊக்குவித்தால், காலப்போக்கில் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாகும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 17) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியா முழுவதும் உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்திக் கொண்டு புதிய படிப்புகளை வழங்க ஆயத்தமாகி வருகின்றன.

புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, அவை பல்கலைக்கழகங்களின் தனியார்மயத்திற்கு வழிவகுத்து விடும் என்பது தான் கவலையளிக்கிறது.

அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ஆகியவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில், புதிது, புதிதான படிப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

மற்றொருபுறம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளின் அடிப்படையில், மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான படிப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, சில தொழில்படிப்புகளையும், தொழில்நுட்பப் படிப்புகளையும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தான் வழங்க வேண்டியுள்ளது. இவை தவிர்க்க முடியாதவை. அப்படிப்புகளை பல்கலைக்கழகங்கள் முதன்மைப் பொறுப்பு ஏற்று நடத்தும்பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், மற்ற நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு புதிய படிப்புகளை வழங்குவது தான் சிக்கலை உருவாக்குகிறது. பல பல்கலைக்கழகங்களில் புதிதாக தொடங்கப்படும் படிப்புகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் நடத்துவதில்லை.

மாறாக, புதிய படிப்புகளை நடத்துவதற்கான வகுப்பறைகள், மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடங்கள், ஆய்வகத்திற்கான இடம் ஆகியற்றையும், படிப்புக்கான சான்றிதழ்களையும் மட்டும் தான் பல்கலைக்கழகங்கள் வழங்கும்.

படிப்புக்கான பாடநூல்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றையும், ஆய்வகக் கட்டமைப்புகளையும் தனியார் தொழில் நிறுவனங்கள் வழங்கும்.படிப்புக்கான கட்டணத்தை தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன; அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வசூலித்துக் கொள்ளும்.

அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்தில் 60 விழுக்காட்டை அந்த நிறுவனங்கள் எடுத்துக் கொண்டு, 40 விழுக்காட்டை மட்டும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்குகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பல்கலைக்கழகங்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உள்வாடகைக்கு வழங்கும் கலாச்சாரம் நாடு முழுவதும் உருவாகி வருகிறது; தமிழக பல்கலைக்கழகங்களும் இதற்கு தப்பவில்லை.

கூட்டாண்மையில் படிப்புகளை வழங்குவது பல்வேறு வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், கூட்டாண்மை முறையில் தனியாரால் வழங்கப்படும் படிப்புகளுக்கு ரூ.1 லட்சம் வரை ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளநிலை தொழிற்படிப்புக்கு (B.Voc. AR/VR Programme ) ஆண்டுக்கட்டணமாக ரூ.49 ஆயிரமும், முதுநிலை தரவு அறிவியல் (M.Sc. Data Science) படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அதன் இணையதளத்திலேயே வெளியிட்டுள்ளது.

இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களால் இத்தகைய படிப்புகளை படிக்க முடியாமல் போய்விடும். மேலும், மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களுக்கு எந்த பங்கும் இல்லை.

தனியார் நிறுவனங்களே தங்கள் விருப்பப்படி மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதால் புதிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முற்றிலுமாக கடைபிடிக்கப்படுவதில்லை.

இப்போது ஒரு சில படிப்புகளில் மட்டும் கடைபிடிக்கப்படும் இந்த அணுகுமுறை, இனி வரும் காலங்களில் விரிவுபடுத்தப்படும் போது, தனியார் பல்கலைக்கழகங்களுக்கும், அரசு பல்கலைக்கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு இது முதல்படியாக இருக்கும் என்பது உறுதி.

பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே ஏழைகளுக்கு தரமான கல்வி இலவசமாகவோ, குறைந்தக் கட்டணத்திலோ வழங்கப்பட வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களும், அரசு கல்லூரிகளும் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் தான் ஏழை மாணவர்களும் கல்வி பெற முடிகிறது; உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடிக்க முடிகிறது.

இச்சூழலை மாற்றி, பல்கலைக்கழகங்களில் தனியார் நிறுவனங்கள் படிப்புகளை நடத்துவதை ஊக்குவித்தால், காலப்போக்கில் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாகும்; அங்கு ஏழைக்கு கல்வி கிடைக்காது.

பல்கலைக்கழகங்கள் இப்படி மாறுவதற்கு காரணம்... அவற்றின் செலவுகள் அதிகரித்து விட்டதும், அவற்றுக்கும் அரசு வழங்கும் மானியம் குறைந்து விட்டதும் தான். புதிய படிப்புகளையும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்கும் அளவுக்கு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அதிகரித்தால் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாவதை தடுக்க முடியும்.

இதை உணர்ந்து கூட்டாண்மை முறையில் நடத்தப்படும் பாடங்களை படிப்படியாக பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும்; அதன்மூலம் பல்கலைக்கழகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்விக்கோயிலாக தொடர்ந்து திகழ்வதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x