Published : 17 Oct 2020 03:40 PM
Last Updated : 17 Oct 2020 03:40 PM

நீட் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை விரைந்து வழங்குக; அன்புமணி

அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி, அழுத்தம் கொடுப்பதன் மூலம் மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அன்புமணி (அக்.17 ) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்; அரசு பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். சாதித்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில், அவர்களில் 7.71 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.44% தேர்ச்சி ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசிய சராசரியை விட அதிக அளவாக 57.44% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட இது 9 விழுக்காடு அதிகம். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720-க்கு 710 மதிப்பெண் எடுத்து 8-வது இடத்தில் உள்ளார். நீட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தமிழக மாணவர் ஒருவர் இத்தகைய சாதனையை படைப்பது இதுவே முதல்முறை. அதேபோல், தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனும், அரசு பள்ளி மாணவருமான ஜீவித் குமார் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு இதுவே உதாரணமாகும். இந்த சாதனைகள் பிற மாணவர்களையும் சாதனை படைக்க ஊக்குவிக்கும். சாதித்த மாணவர்களை மீண்டும் வாழ்த்துகிறேன்.

மாணவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ள நிலையில், அரசும் அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், ராமதாஸின் யோசனையை ஏற்று, ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அத்துடன் நிற்காமல் அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி, அழுத்தம் கொடுப்பதன் மூலம் 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக சார்பில் வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x