Published : 17 Oct 2020 03:24 PM
Last Updated : 17 Oct 2020 03:24 PM

சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் பண்பாட்டு சின்னங்களை அழிக்கும் வனத்துறை: முத்தரசன் கண்டனம்

பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை வனத்துறை அழிப்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (அக். 17) வெளியிட்ட அறிக்கை:

"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் பண்பாட்டு சின்னங்களை, வனத்துறை அழித்து வருகின்றது. வழி வழியாக பல நூற்றாண்டு கலமாக பழங்குடியினர் வழிபட்டு வரும் குலச் சின்னங்களையும் கோயில்களையும் அழித்து வரும் சத்தியமங்கலம் வனத்துறையின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 மூலம் மத்திய பாஜக அரசு பெரும் வணிக நிறுவனங்களின் இயற்கை வளக் கொள்ளைக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
மறுபக்கம் சாதி, மதம் பாராமல் இயற்கையோடு இசைந்து வாழும் பல வகைப்பட்ட பழங்குடி மக்களின் பண்பாட்டு சின்னங்களையும், வழிபாட்டு இடங்களையும் அழித்தொழித்து, அவர்களுக்கு பெரும்பான்மை சாயம் பூசும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது.

வன உரிமைச்சட்டம் 2006 பழங்குடியினரின் வாழ்வுரிமை மற்றும் வழக்காறு வழிப்பட்ட பண்பாட்டு உரிமைகளையும் உறுதி செய்துள்ளது. ஆனால், ஆசனூர் வனக்கோட்ட அலுவலர் வன உரிமை சட்டத்தை தொடர்ந்து அத்துமீறி பழங்குடி மக்களை ஆத்திரமூட்டி தாக்குதல் நடத்தி வருகிறார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, பழங்குடி மக்களின் வாழ்வுரிமை மற்றும் வழக்காறு வழிப்பட்ட பண்பாட்டு உரிமைகளை பாதுகாப்பதுடன், சட்ட அத்துமீறிலில் ஈடுபட்டு வரும் வனத்துறை அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x