

நீட் தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல என்பதை நிரூபிக்கவே வெறியுடன் படித்தேன் எனக் கூறியுள்ளார் அரசுப் பள்ளிகள் பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தேனி மாணவர் ஜீவித்குமார்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார். இவர், கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 548 மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கியதால் இவரை நீட் தேர்வு எழுத பள்ளி தலைமையாசிரியர் மோகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தினர். பள்ளியிலேயே பயிற்சியும் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட்தேர்வு எழுதினார். இதில் 720-க்கு 190 மதிப்பெண் பெற்றார். இருப்பினும் இரண்டாம் முறையாக தற்போது இத்தேர்வை எழுதி 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி பிரிவில் இவர் தேசிய அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 1823வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மாணவர் ஜீவித்குமாரை தேனி ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
மேலும் அவர் பேசுகையில், "மாணவரின் இந்த வெற்றி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரிய உந்துதலை ஏற்படுத்தியுள்ளது இவருக்கு தேவைப்படும் உதவியை மாவட்ட நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது. தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்யப்படும். இந்த வெற்றி மூலம் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்களின் பயத்தைப் போக்கி உள்ளது" என்றார்.
பெற்றோருடன் மாணவர் ஜீவித்குமார்.
தொடர்ந்து பேசிய ஜீவித்குமார், "டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் முதலில் இல்லை. ஆனால், நீட் தேர்வு குறித்து பயந்து பலரும் தற்கொலை செய்வது வருத்தமாக இருந்தது. நீட் தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல என்பதை நிரூபிக்கவே வெறியுடன் படித்தேன். மத்திய பாடத்திட்ட புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து படித்தேன். வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால் நீட் மட்டுமல்ல எல்லா தேர்வுகளுமே மிக எளிமையானதுதான்" என உற்சாகமாகக் கூறினார்.