Published : 17 Oct 2020 13:45 pm

Updated : 17 Oct 2020 13:45 pm

 

Published : 17 Oct 2020 01:45 PM
Last Updated : 17 Oct 2020 01:45 PM

7.5 சதவீத உள் ஒதுக்கீடு; நீதிபதிகள் வருந்தி கண்கலங்கும் அளவுக்கு ஆபத்தான நிலையில் சமூக நீதி: கி.வீரமணி கருத்து

k-veeramani-on-reservation
கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அனுமதியளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவது ஏன் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 17) வெளியிட்ட அறிக்கை:

"நீட் தேர்வு என்பது ஒரு 'நவீன மனுதர்மம்' என்பது நாளும் மக்களுக்கு நன்கு புரிந்துவருகிறது.

ஒடுக்கப்பட்டோருக்குக் கதவடைப்பு

வறட்டுப் பிடிவாதம், அதுவும் தமிழ்நாடு போன்ற மருத்துவக் கல்வியில் வளர்ந்தோங்கி வரும் மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட, கிராம, ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்புக் கதவை அறவே மூடுவதற்கே இப்படி ஒரு திட்டமிட்ட தடுப்பு ஏற்பாடு!

நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், கோச்சிங் சென்டருக்குப் போகாதவர்கள் முதல் ஆண்டிலேயே வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை வெகு வெகுச் சொற்பமே என்பது சுவர் எழுத்து போன்று பளிச்சிடுகிறது!

நீட் தேர்வு எழுதிடும் மாணவர்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் போதிய வாய்ப்புக் கிட்டவில்லை என்பதால், தமிழக அரசு ஓய்வுபெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு குழு அமைத்தது. அக்குழு, 10 சதவிகித இட ஒதுக்கீடு தர பரிந்துரை தந்தது.

ஆனால், தமிழக அமைச்சரவை 7.5 சதவீதத்திற்கான தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இப்போது 45 நாட்களுக்கு மேலாக அது ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

நீதிபதியின் கண்ணீர்!

இதற்கிடையில் நீட் தேர்வு எழுதியுள்ள அரசுப் பள்ளி மாணவர் சார்பிலும், மருத்துவர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை முன்பு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் நியாயமான கேள்விகளை எழுப்பி, நீதி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு, விசாரணை செய்து தமிழக அரசு வழக்கறிஞரிடம், 'ஆளுநரிடம் ஒரு மாதத்திற்கும்மேல் கோப்பு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு இவ்வாண்டு பயன்பெறச் செய்யவேண்டாமா?' என்று உருக்கத்துடன் கேட்டுக்கொண்டு, ஒரு சதவீதத்திற்கும் கீழேதான் அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர் சேரும் நிலை இருப்பதும், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழித்து பயன்பெற முடியாத யதார்த்த நிலை குறித்தும் கேட்டபோது, மூத்த நீதிபதி கிருபாகரன் கண்களில் நீர் வழிந்தோடியது என்று செய்திகள் கூறுகின்றன!

தமிழ்நாட்டு மெத்தனம் குறித்து நீதிபதிகள்கூட கண்ணீர் விடும் காட்சி அசாதாரணமானது அல்லவா? நிலைமை எவ்வளவு மோசமானதாகியிருந்தால், இப்படி ஒரு காட்சி அவலம் ஏற்பட்டிருக்க முடியும்?

தமிழக அரசின் வரவேற்கத்தக்க முடிவு!

தமிழ்நாட்டு ஆளுங்கட்சியை மிரட்டிடும் வித்தைகளை, வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மத்திய பாஜக ஆட்சி செய்வதும், குட்டக் குட்டக் குனிந்து போகும் தமிழக அரசின் எல்லையற்ற சகிப்புத்தன்மையையும் உலகம் காண்கின்றது.

ஆளுநர் ஏற்கெனவே உச்ச நீதிமன்றமே தடையில்லை என்று கூறிய எழுவர் விடுதலை சம்பந்தமாகப் பிடிவாதமாக முரண்டு பிடித்து கோப்புகளை வைத்துள்ள நிலைபோல, இந்த நீட் தேர்வு உள் ஒதுக்கீடு சட்டத்திலும்கூட உடனடியாகத் தனது ஒப்புதலை அல்லது காரண காரியங்களை மறுப்புடன் கூடிய திருப்பி அனுப்புதலோ செய்யாமல் இருப்பது, எவ்வகையில் நியாயம் ஆகும்?

இதில் தமிழ்நாடு அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வரும்வரை இவ்வாண்டு கலந்துரையாடல் நடைபெறாது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு உத்திதான். உறுதியுடன் இறுதிவரை இருந்தால் சரி.

இதில் இந்த அரசு உறுதிகாட்டிட வேண்டும்; ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வெளிவந்த பல முக்கிய தீர்ப்புகளில் மாநில அரசு உள் ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டப்படி, சமூக நீதியில் எந்தத் தடையும் கிடையாது என்று அரசியலமைப்புச் சட்ட அமர்வு கூறியிருக்கும் நிலையில், தமிழக ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வது ஏன் என்பது புரியவில்லை.

இதற்காகவே முதல்வரும், சில அமைச்சர்களும் சில வாரங்களுக்குமுன் ஆளுநரை நேரில் சந்தித்து, நினைவூட்டி வற்புறுத்தியும் வந்தார்கள் என்றும் செய்திகள் வந்தன.

நீதிபதிகள் வருந்தி கண்கலங்கும் அளவுக்கு சமூக நீதி இங்கு திட்டமிட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவது, எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல!

அரசியல் ரீதியாக கடும் விலையைக் கொடுக்க நேரிடும்!

அல்லற்பட்டு ஆற்றாது ஏழைகள் அழும் கண்ணீருடன், நீதிபதிகள் கண்ணீரும் இணையும் நிலை ஒருபோதும் வீணாகிவிடாது!

இதில் காட்டப்படும் அலட்சியம், கடும் விலையை சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாவது உறுதி! உறுதி!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

கி.வீரமணிமருத்துவக் கல்விஉள் ஒதுக்கீடுதமிழக அரசுஅரசுப்பள்ளி மாணவர்கள்K veeramaniMedical educationReservationTamilnadu governmentGovernment school students

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author