Published : 17 Oct 2020 01:09 PM
Last Updated : 17 Oct 2020 01:09 PM

நீட் தேர்வில் சாதனை படைத்த கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகன்; வாய்ப்புக் கிடைத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதிப்பார்கள்: ராமதாஸ் பெருமிதம்

சென்னை

பெரியகுளம் அருகே அரசுப் பள்ளியில் படித்த கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததை பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

வாய்ப்புக் கொடுத்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிப்பார்கள். ஆனால் அப்படி வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதால் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாநிலப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண் மூலம் மருத்துவப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வு அமலானதால் திறமையிருந்தும் நீட் தேர்வில் தேர்வாகாமல் பல கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவாகவே உள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தாலும் நீட் பாடத்திட்டம் தனி என்பதால் ஆரம்பத்தில் தமிழக மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். வசதியுள்ளவர்கள், இல்லாதவர்கள் யாரானாலும் தங்கள் குழந்தைகளின் மருத்துவக் கனவுக்காக லட்சக்கணக்கில் பணம் கட்டி நீட் தேர்வு மையத்தில் சேர்த்து படிக்க வைத்தனர்.

இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் சிறிது சிறிதாக உயர்ந்தது. நேற்றைய நீட் தேர்வு முடிவில் தேர்ச்சி சதவீதம் 57.4% ஆக இருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் இந்திய அளவில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி சொந்த ஊர் திரும்பினார். தற்போது ஆடு மேய்த்து வருகிறார்.

இவரது மகன் ஜீவித் குமார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வர்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற அவர் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் இந்திய அளவில் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடமும், தரவரிசைப் பட்டியலில் 1823-வது இடமும் பிடித்துள்ளார். அரசுப் பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கியதால் அவரது ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வுக்குப் பயிற்சி பெற்றார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தேர்வெழுதிய அவர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவரது சாதனையை பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ் ட்விட்டர் பதிவு:

“தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவரும், கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனுமான ஜீவித் குமார் நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்.

— Dr S RAMADOSS (@drramadoss) October 17, 2020


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு ஜீவித் குமாரின் சாதனைதான் உதாரணம். ஆனால், அனைத்து ஏழை மாணவர்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்பதே நீட் தேர்வை எதிர்ப்பதற்குக் காரணம்”.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x