ஈரோட்டில் லஞ்சப் புகாரில் சிக்கிய பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் போலீஸார் சோதனை: சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஈரோட்டில் லஞ்சப் புகாரில் சிக்கிய பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், ரூ.30 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகளில் நிறுவப்படும் கொதிகலன்களுக்கு, (பாய்லர்) பொதுப்பணித்துறை கொதிகலன் பிரிவில் அனுமதி பெற வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை கொதிகலன் உறுதித்தன்மை குறித்து இப்பிரிவு அதிகாரி சான்று வழங்க வேண்டும். கொதிகலன் இயக்க அனுமதி வழங்குவதற்கும், ஆண்டுதோறும் புதுப்பிக்கவும், லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் சென்றன.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் 4 அரிசி ஆலைகளில் கள ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின்போது லஞ்சம் பெறப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, டிஎஸ்பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இந்த அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் (50), புரோக்கராக செயல்பட்டு வந்த பவானி எலவமலை கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (45) ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு சங்குநகரில் உள்ள உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரொக்கம் ரூ.66 ஆயிரம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மகேஷ் பாண்டியன் சொந்த மாவட்டம் தேனி என்பதால் அங்கு உள்ள வீடுகளிலும் சோதனை நடப்பதாக தெரிவித்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார், சோதனை முடிவில் மொத்தம் கைப்பற்றப்பட்ட சொத்துகள் விவரம் தெரியவரும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in