Published : 17 Oct 2020 12:13 PM
Last Updated : 17 Oct 2020 12:13 PM

அழகிய தமிழ்ப் பெயர்களுடன் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் அருகே கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அழகிய தமிழ்ப் பெயர்கள் கொண்ட 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மு.விசாலி, ரா.கோகிலா, து.மனோஜ் ஆகியோர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீந்தார் அரண்மனை எதிரில் பழமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தை பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

இந்த கல்வெட்டில் நிச்சி நாயகனான மேல்கீரை நாடாள்வான், மாணிக்கன் உய்யவந்தானான குளதையாதயன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனார் கோயிலுக்கு விற்று, அதை சிவன் கோயில்களின் பொறுப்பாளராகக் கருதப்படும்

சண்டேஸ்வரதேவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளதையும், இதற்கு சாட்சியாக பலர் கையொப்பம் இட்டுள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

தற்போது நிலம் விற்பனை செய்யும்போது வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் ஆகியோர் பத்திரத்தில் கையொப்பம் இடுவது போல அக்காலத்தில் ஓலைச் சுவடியில் அவர்களின் கையொப்பம் பெற்று அதை கல்வெட்டில் வெட்டி வைப்பார்கள்.

கையொப்பம் இடத் தெரியாதவர்களை தற்குறி எனவும், அவர்களுக்கு மற்றவர்கள் சான்று இடுதலை தற்குறி மாட்டெறிதல் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதில் தற்குறியான மூவருக்கு பிள்ளையார் அழகிய விடங்கர் கோயிலில் இருக்கும் முத்தன் சிவலங்கனான இமையே தருவான், சாத்தனிரட்டையான் அஞ்சாத காடத்தட்டான், தச்சன் சீராமன் மூவானான இளமை ஆசாரியன் ஆகியோர் சான்று இட்டுள்ளனர்.

மேலும் கூத்தன் சோழனான செம்பிலராயன், கொற்றன் முத்தனான செம்பில் வளநாடன், சொல் நாணலையான் வழுதி சிங்கராயன், சிறுமுத்தனாளுடையானான வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான் தொண்டையன், பேரருங்கோவேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்ட ராயன் ஆகியோரும் இதில் கையொப்பம் இட்டுள்ளனர்.

இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிந்து கொள்ளமுடிகிறது.

கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்துவிட்டதால் கோயிலுக்கு விற்கப்பட்ட நிலம் பற்றி முழுமையாக அறிய இயலவில்லை. அதன் எல்லைகளாக இரு பெருவழிகள், போளம், சிறுகுளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

இதில் சொல்லப்படும் பெருவழிகள் (நெடுஞ்சாலைகள்) பெரியபட்டணம், கன்னியாகுமரி செல்லும் பெருவழிகளாக இருக்கலாம். போளம் என்பது நறுமணப்பண்டங்கள் ஆகும். வணிகர்களின் விற்பனைப் பண்டமான போளம் வைக்கப்பட்டிருந்த இடமும் கல்வெட்டில் ஒரு எல்லையாக கூறப்பட்டுள்ளது.

சாயல்குடி இரு வணிகப் பெருவழிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்த ஒரு முக்கிய வணிக நகரமாக பழங்காலம் முதல் இருந்திருப்பதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

கல்வெட்டுள்ள இடம் தற்போது அங்காள ஈஸ்வரி கோயில் என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் பிடாரி கோயில் எனப்படுகிறது. நிலம் விற்கப்பட்டது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு என்றாலும், அதன் கல்வெட்டை பிடாரி கோயிலின் கிழக்குப் பகுதியில் வைத்துள்ளதாக கல்வெட்டில் சொல்லப்படுகிறது.

சாயல்குடி சிவன் கோயிலில் உள்ள கி.பி.10-ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் இவ்வூர் உலகு சிந்தாமணி வளநாட்டு சாகியில்குடி என குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x