அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா; கட்சிக் கொடியேற்றினார் ஓபிஎஸ்

கட்சிக் கொடியேற்றும் ஓபிஎஸ்
கட்சிக் கொடியேற்றும் ஓபிஎஸ்
Updated on
1 min read

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, துணை முதல்வரும் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை ஏற்றினார்.

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று (அக். 17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு தொண்டர்கள் பலர் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

இதையடுத்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அதன்பின், கட்சிக் கொடியேற்றி வைத்து, தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி உற்சாகம் அடைந்தனர். இந்நிகழ்வில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

தன் தாயார் மறைவையொட்டி, முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் இருப்பதால் இந்நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை.

முன்னதாக 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக, நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின்போதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையைப் படைப்போம் என உறுதி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in