Published : 17 Oct 2020 11:24 AM
Last Updated : 17 Oct 2020 11:24 AM

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் சொத்து விவரம் தாக்கல் செய்வது கட்டாயம்: ஜனவரி முதல் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும்

கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் வரும் ஜனவரி முதல் அரசு அதிகாரிகள் ஆன்லைனில் சொத்து விவரம் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார்.

புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்வது அவசியம். முக்கியமாக பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளுக்கு ஆண்டுதோறும் அதிகாரிகளால் சொத்துக்களை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முக்கியமாக ஊழலை தடுப்பதும், அரசு ஊழியர்களின் சொத்துக்களை கண்காணிப்பதும், அவர்களின் சொத்துக்களை அவர்கள் அறிந்த வருமான ஆதாரத்திற்கு ஏற்றவாறு அடையாளம் காண்பதற்கும் உதவும். ஆனால் அந்த நடைமுறை புதுச்சேரியில் இதுவரை சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை.

புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் அசையும், அசையாத சொத்து விவரங்களை எவ்வளவு பேர் தாக்கல் செய்துள்ளனர் என்று தகவல் அரியும் உரிமைச் சட்டத்தில் சவுரவ் தாஸ் என்பவர் அண்மையில் தகவல்களை கோரியிருந்தார்.

ஆனால், அரசு தரப்பில் தகவல் மறுக்கப்படவே, அதை மேல்முறையீடு செய்தார். அதையடுத்து மேல்முறையீடு ஆணையம் தகவல் தர அறிவுறுத்தியது. அத்துடன் அதிகாரிகளின் சொத்துஅறிவிப்புகளை டிஜிட்டல் மயமாக்கவும் மேல்முறையீட்டு ஆணையம்தலைமை செயலகத்துக்கு அறிவுறுத்தி யுள்ளது. இதையடுத்து பொதுத் தகவல் அதிகாரியும், சார்பு செயலருமான கண்ணன் அளித்த பதிலில், “புதுச்சேரியில் மொத்தம் 10,949 குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளில் 2019-ம்ஆண்டில் 2,506 அதிகாரிகள் தங்கள் அசையும், அசையாதசொத்துக்களின் விவரங்கள் அறிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சவுரவ் தாஸ் கூறுகையில், “புதுச்சேரியிலுள்ள குரூப் ஏ, பி அதிகாரிகளில் நான்கில் ஒருவர் சொத்து விவரங்களை 2019-ல் தரவில்லை. சொத்து விவரங்கள் தராதவர் பட்டியலில் பல அதிகாரிகள், அமைச்சர்களின் தனி செயலர்கள், பல்வேறு துறை இயக்குநர்கள், பேராசிரியர்கள், கல்லூரி, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், விரிவுரை யாளர்கள்,ஆசிரியர்கள், எஸ்பிக்கள், ஆய்வாளர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். அதைத்தொடர்ந்து தலைமைச்செயலரும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட் டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, “தற்போது தலைமைச்செயலாளர் அஸ்வனிகுமார், அனைத்து அதிகாரிகளும் ஜனவரியில் இருந்து தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் இனி ஆன்லைனில் தாக்கல் செய்யஉத்தரவிட்டுள்ளார். அது டிஜிட்டல் மயமாக்கப்படும். தலைமை விஜிலென்ஸ் அலுவலகம் இதை கண்காணிக்கவும், சரியான நேரத்தில் தங்கள் சொத்து விவரங்களை அதிகாரிகள் தெரிவிப்பதையும் உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x