

அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு ஆசிரியர்கள் தங்கள் பணியை பொதுநல சிந்தனையோடு சிறப்பாக செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஒரு நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதன் பள்ளிக்கூடங்கள்தான் தீர்மானிக்கிறதென்று தத்துவஞானிகள் கூறியுள்ளார்கள்.
ஏனென்றால் வருங்கால தலைமுறைகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு பள்ளிக்கூட ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது.
வெறும் ஏட்டுக்கல்வியோடு மட்டும் நில்லாது, வாழ்வியல் நெறிமுறைகளையும் நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொடுத்து, ஒவ்வொரு மாணவரும் இந்த நாட்டின் நல்ல குடிமகனாக வாழ வழிகாட்டி இந்த நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் மாற்றி அமைக்கும் ஒரு யாகம்தான் ஆசிரியப்பணியாகும்.
அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் அவர்கள் ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.
பெரும்பாலான மக்களிடையே சுயநல சிந்தனை பெருகியுள்ளதைப்போலவே ஆசிரிய பெருமக்களிடத்தும் ஒரு நல்லாசிரியராக இருந்துவிட்டால் மட்டும் நமக்கு என்ன கிடைக்கபோகிறது என்ற ஒரு கேள்வி இருக்கிறது.
மறைந்த டாக்டர்.அப்துல்கலாம் இறுதியாத்திரையில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய லட்சக்கணக்கான மாணவர்களின் பங்கேற்புதான் அவர் நல்லாசிரியராக இருந்ததற்கான சமூக அங்கீகாரமாகும்.
எனவே டாக்டர். அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு ஆசிரியர்கள் தங்கள் பணியை பொதுநலசிந்தனையோடு சிறப்பாக செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஆசிரிய பெருமக்களின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது தலைமையிலான தேமுதிக என்றும் துணை நிற்கும் என்று உறுதியளிப்பதோடு, மீண்டும் ஒருமுறை என் இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.