

இந்தியாவில் முதல்முறையாக 2500 அடி ஆழம் வரை துளையிடக்கூடிய நவீன ரிக் வாகனம் திருச்செங்கோட்டில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிஆர்டி ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது அதிகபட்சமாக 1500 அடி ஆழம் வரை நிலத்தில் துளையிடக் கூடிய ரிக் வாகனம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக, இந்தியாவில் முதல்முறையாக 2500 அடி ஆழம் வரை துளையிடக் கூடிய அதிக குதிரை திறன் கொண்ட ரிக் வாகனம் திருச்செங்கோட்டில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வாகனத்தின் அறிமுக விழாவில், பிஆர்டி நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ், மேலாண்மை இயக்குநர் பரந்தாமன், திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாரிகணேசன், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி, எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த புதிய வாகனம் குறித்து பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் பரந்தாமன் கூறியதாவது: புரோ லாஜிக் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த ரிக் இயந்திரம் இந்தியாவிலேயே முதல் முறையாக அசோக் லே லேண்ட் நிறுவனத்தின் பி.ஏ 6 என்ற கேபினெட் பிட்டிங்குடன் கூடிய 250 குதிரை திறன் சக்தி கொண்ட டிரக்கில் அமைக்கப்பட்டுள்ளது. 180 பீட் சிலிண்டர்கள் கொண்ட லாரி, மாஸ்க் ஹெவியாக அமைக்கப் பட்டுள்ளது. 6 ரோப் புள்ளி சிஸ்டம் மூலம் இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. வீல் பேஸ் தள்ளி இருப்பதால் எல்லாவித பகுதிகளிலும் செல்ல முடியும்.
ஏற்கெனவே இருந்த ஆட்டோ லோடர் வாகனத்தை கொண்டு ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 500 அடி வரை ஆழமுள்ள ஆழ்துளை கிணறு அமைக்க முடியும். தற்போது உருவாக்கியுள்ள புதிய ரிக் வாகனத்தின் மூலம் 2200 அடி முதல் 2500 அடி வரை ஆழ்துளை கிணறு அமைக்க முடியும். முந்தைய வாகனங்களோடு ஒப்பிடுகையில், ரிக் ராடுகளை சிரமப்பட்டு தூக்கவோ, இணைக்கவோ, கழட்டவோ தேவையில்லை. பணியின்போது 4 பணியாளர்கள் மட்டுமே போதுமானது. 50 சதவீதம் நேரம் மற்றும் டீசல் மீதமாகும் என்றார்.