

பெண்களிடம் துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு ஆலோசனைகளை வழங்கும் வகையில் ‘வாழ நினைத்தால் வாசல் திறக்கும்’ என்கிற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கு ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பாக நடத்தப்பட்டுவருகிறது.
பெண்கள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, பெண்களுக்கான சுயதொழில் வழிகாட்டி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் நிகழ்வாக மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (அக்டோபர் 17) மாலை நடைபெறவிருக்கிறது.
பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. பெண்களில் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் கணிசமானவை. பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அதன் ஓர் அங்கமாக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் மார்பகப் புற்றுநோய் குறித்த இணையவழி கருத்தரங்கு இன்று மாலை நான்கு மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவனமனையைச் சேர்ந்த புற்றுநோய்
சிகிச்சை நிபுணர் டாக்டர் கவிதா, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாந்தி ஆகிய இருவரும் மார்பகப் புற்றுநோய் குறித்துப் பேசுகிறார்கள். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திவரும் ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆனந்தகுமாரும் கருத்தரங்கில் பங்கேற்கிறார். மார்பகப் புற்றுநோயுடன் போராடி அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கும் வி.ரத்னா, எஸ். கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
நிகழ்வின் இறுதியில் வாசகியரின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/45-vnvt-women.html என்கிற இணைப்புக்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.