

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.82 ஆயிரம் மற்றும் 150 நெல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவரும் நெல்லுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வரை கமிஷன் கேட்பதாக புகார்கள் எழுந்தன.
அதனடிப்படையில் நேற்று முன்தினம் மாலை கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்த திருவாரூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீஸார், கொள்முதல் நிலையத்தில் இருந்த விவசாயிகளை வெளியேற்றிவிட்டு சோதனை நடத்தினர்.
கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் ஆனந்தராஜிடம் இருந்து ரூ.32 ஆயிரம் ரொக்கம், கொள்முதல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஓட்டுநரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் என ரூ.82 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
கிடங்கிலிருந்து மறு விற்பனைக்கு
மேலும், அந்த லாரியில் இருந்த 150 நெல் மூட்டைகள் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வேறு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டு, அசேஷம் திறந்தவெளி அரசு நெல் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மறு விற்பனைக்காக லாரியில் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நெல் மூட்டைகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அஷேசம் கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல உதவியவர்கள், இவர்கள் எடுத்துவரும் நெல்லை விவசாயிகள் கொண்டு வரும் நெல்லைப்போல மீண்டும் கொள்முதல் செய்ய உதவிய அரசு கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஆகியோர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கணக்கில் வராத பணம் பிடிபட்டதற்கு பொறுப்பேற்று உணவுத் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி, கண்ணாரப்பேட்டை கொள்முதல் நிலையம் முன்பாக திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.