

கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை நேற்று முடக்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி, கள்ளக்குறிச்சி எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 2008-ல் இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் 2.45 லட்சம் பங்குகளை 1 லட்சம் அமெரிக்க டாலரை முதலீடு செய்து வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்தில் 55 ஆயிரம் டாலர் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த முதலீடுகளை செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியை கவுதம் சிகாமணி பெறவில்லை என்றும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முதலீடுகள் மூலம் கவுதம் சிகாமணி லாபம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்படி, விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்து சம்பாதித்ததாக கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள விவசாய நிலம், வணிக கட்டிடம்,வீடு, வங்கிக் கணக்கு ஆகியவற்றை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. அவரிடம் விரைவில் விசாரணை நடத்தவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.