Published : 30 Sep 2015 08:03 AM
Last Updated : 30 Sep 2015 08:03 AM

மக்களை ஏமாற்றும் பிரபல நிறுவனங்கள்: சூரியகாந்தி, கடலை எண்ணெய்யில் கலப்படம்- நுகர்வோர் அமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் பிரபல நிறுவனங்கள் விற்றுவரும் பல பாக்கெட்களில் பாமாயில், பருத்திவிதை எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘தூய்மையான கடலை எண்ணெய், நல்லெண்ணைய்யை சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது’ என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில், பருத்திவிதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து கடலை எண்ணெய் என்ற பெயரில் விற்பது இந்திய நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் இந்த அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்துவந்த இதன் நிறுவனர் தேசிகன் கடந்த ஜூன் மாதம் மறைந்தார். அதன் பிறகு, அவரது மனைவி நிர்மலா தேசிகன் இந்த அமைப்பை நிர்வகித்து வருகிறார். எண்ணெய் கலப்படம் குறித்து இந்த அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறியதாவது:

சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சோதனை செய்தனர். தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது.

சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு விதிமுறை உள்ளது. ஆனால், 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அக்மார்க் முத்திரை இல்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011-ன்படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்களிலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், 79 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்களில் உரிமம் எண் இல்லை. கலப்படம் இல்லாத சுத்தமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.105 முதல் ரூ.120 வரை உள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.52 மட்டுமே. அதனால், பாமாயிலை நிறம், மணம் நீக்கி ரீஃபைண்டு செய்து, கடலை எண்ணெய் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்கின்றனர்.

இவ்வாறு எம்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.

காணாமல்போன செக்குகள்

சென்னையில் இயற்கை அங்காடி நடத்தும் அனந்து என்பவர் கூறியபோது, ‘‘ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க 2.5 கிலோ கடலை தேவை. ஒரு கிலோ கடலை விலை ரூ.100 முதல் ரூ.110 வரை. எனவே, கலப்படமின்றி சுத்தமாக ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க குறைந்தபட்சம் ரூ.250 ஆகும். இதனால், செக்குகளில் ஆட்டப்படும் கடலை எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. மேலும், செக்கில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயில்தான் உடலுக்கு நன்மை தரும் புரதம், நல்ல கொழுப்புச் சத்துகள் ஆகியவை சிதையாமல் கிடைக்கும். பாக்கெட்களில் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று தரமற்ற எண்ணெயை மக்கள் வாங்கத் தொடங்கியதால், வருமானமின்றி செக்குகள் மூடப்பட்டுவிட்டன. நம் கண் முன்பாகவே கடலையைப் போட்டு எண்ணெய் எடுத்து தரும் செக்குகள் இப்போது இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நடக்கிற இயந்திர சுத்திகரிப்பு முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்தே, கலப்படமும் தொடங்கிவிட்டது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x