

சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையில் இருந்து நண்பர்களுடன் சென்னை சென்ற விஜயகாந்த், பின்னாளில் நடிகர் சங்கத் தலைவராகவும், தேமுதிக தலைவராகவும் செல்வாக்குடன் உள்ளார்.
விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் வெற்றியும், சறுக்கல்களும் ஏற்பட்டபோது உடன் நின்றவர்கள் அவரது நண்பர்கள். நட்பின் இலக்கணமாக இருந்த அவர்களுடைய நட்பில், சமீபகாலமாகத் தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்தின் நிழலாக இருந்த இப்ராகிம் ராவுத்தர், நெருக்கமான மற்றொரு நண்பர் மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன் என ஒவ்வொருவராக ஒருகட்டத்தில் விஜயகாந்தை விட்டுப் பிரிந்தனர். இவர்களைப் போலவே, விஜயகாந்தின் ஆரம்ப கால மதுரை நண்பர்கள் பலரும் தற்போது அவருடன் தொடர்பில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் பழநியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் முன்னிலையிலேயே கட்சித் தொண்டர் ஒருவர் தேமுதிக மாவட்டச் செயலாளரை கண்டித்து தீக்குளித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த தொண்டரை பார்க்கச் சென்ற விஜயகாந்திடம், கட்சி நிர்வாகிகள் சிலர், உங்கள் நண்பர் சாந்தாவும் விபத்தில் கை, கால் உடைந்து பக்கத்து வார்டில்தான் சிகிச்சை பெறுகிறார் என்றனர்.
இதனால் பதறிய விஜயகாந்த், உடனே அவரைச் சென்று பார்த்தார். என்ன சாந்தா! இப்படி கிடக்கிறாயே, உனக்கு என்னாச்சு என கண்கலங்கினார். விஜயகாந்தை பார்த்த சந்தோஷத்தில், சாந்தாராமும் பேச முடியாமல் கலங்கினார்.
பக்கத்தில் நின்ற பிரேமலதா, விஜயகாந்திடம் “யாருங்க இவரு, இப்படி கண் கலங்குறீங்க” எனக் கேட்டுள்ளார். அதற்கு விஜயகாந்த், எனது நண்பன். இவனப் பத்திச் சொன்னா நிறைய பேசணும் என கண்களில் வழிந்த கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
விஜயகாந்த் சென்றபின் கட்சி நிர்வாகிகள் சிலர் ஓடிவந்து, சாந்தாராமின் மனைவி துளசியிடம் ரூ.2 ஆயிரத்தைக் கொடுத்து, “இப்போதைக்கு வைத்துக் கொள்ளுங்கள். கேப்டன் இருக்கிறார். கவலைப்படாதீங்க” என்றனர்.
எழுபதுகளில் சினிமா ஆசை துளிர்விடும் முன்பு விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர், சுந்தர்ராஜன் எம்எல்ஏ, சாந்தாராம் எல்லோரும் மதுரை வீதிகளில் ஒன்றாகச் சுற்றுவார்களாம். தியேட்டர்களுக்குச் செல்வார்களாம்.
பின்னாளில் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்து கதாநாயகனாக பிரபலம் ஆனதும், 1981-ம் ஆண்டு மதுரை பொன்னகரம் 2-வது தெருவில், சாந்தாராம் ‘தென்றல் விஜயகாந்த் ரசிகர் மன்றம்’ திறந்துள்ளார்.
விஜயகாந்தின், ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் மதுரையில் ஆட்களை திரட்டி வந்து படம் பார்ப்பாராம். விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியபோது, மதுரையின் பல பகுதிகளில் முன்னின்று அக்கட்சி கம்பங்களை நட்டுள்ளார்.
தற்போது அறுவை சிகிச்சையில் ஒரு கையின் 4 விரல்களை இழந்து, தொடைப்பகுதியில் பலத்த காயத்துடன் மருத்துவ சிகிச்சைக்கு வழியில்லாமல், படுத்த படுக்கையாக இருக்கிறார்.
67 வயதைக் கடந்துவிட்ட சாந்தாராமுக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன். 2-வது திருமணம் செய்ததால் சாந்தாராமை முதல் மனைவியின் வாரிசுகள் கண்டுகொள்வதில்லை.
தற்போது சாந்தாராம், 2-வது மனைவி துளசி, கல்லூரியில் படிக்கும் மகள் மகாலட்சுமி ஆகியோருடன் மதுரை எல்லீஸ் நகரில் வசிக்கும் வீட்டுக்கு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்.
விஜயகாந்தின் நண்பர் என்பதால் சாந்தாராமின் நிலையைப் பார்த்து, அந்த வீட்டின் உரிமையாளர், இருக்கிற வரை இருந்துட்டுப் போகட்டும் என வாடகை வாங்குவதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சாந்தாராம் ‘தி இந்து’விடம் கூறும் போது, “விஜியின் (விஜயகாந்த்) அப்பா, ரைஸ்மில் வச்சிருந்தார். மதுரை சென்ட்ரல் தியேட்டர் பக்கம்தான் தினமும் காலையும், மாலையும் எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிப்போம்.
விஜி, இப்ராகிம் ராவுத்தரு, சுந்தர்ராஜன் எல்லாரும் எந்த வேலைக்கும் போகாம, சினிமாவுல நுழைய தீவிர முயற்சி செய்தாங்க. நான், மில்லில் வேலை பார்த்தேன். சினிமா வாய்ப்பு தேடி அவங்க எல்லாரும் சென்னை போனபோது என்னையும் கூப்பிட்டாங்க. எனக்கு யோகமில்லை. நான் போகலை.
சினிமாவில் விஜி ஹீரோவாகி நிறைய சம்பாதிச்சாலும், பழச மறக்கல. மதுரை வரும்போதெல்லாம், மில்லில் இருந்து நான் வரும்வரை காத்திருந்து காருல கொடைக்கானல், குற்றாலம்னு ஊர் ஊரா அழைச்சிட்டு போவான்.
கடவுள் மாதிரி நேரில் வந்த விஜியிடம் நான் உதவி கேட்கலை. எனது நிலையை நான் சொல்லாவிட்டாலும், கண்டிப்பா விசாரிச்சிருப்பான். எனக்கு உதவுவான்” என்றார்.