Published : 16 Oct 2020 08:27 PM
Last Updated : 16 Oct 2020 08:27 PM

தேர்தலுக்கு முன் மதுரை மாநகர அதிமுக 2-ஆக பிரிப்பா?- ஓபிஎஸ் உதவியை நாடும் செல்லூர் ராஜூ

மதுரை

மதுரை மாநகர அதிமுகவை இரண்டாக பிரிப்பதைத் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ, ஓ.பன்னீர் செல்வம் உதவியை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்ட அதிமுக, மாநகரம், புறநகர் கிழக்கு மற்றும் புறநகர் மேற்கு ஆகிய மூன்று மாவட்டங்களாக செயல்படுகிறது.

மாநகர மாவட்டச் செயலாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் உள்ளனர்.

எம்.பி தேர்தலுக்கு முன் மாநகர் மற்றும் புறநகர் ஆகிய இரண்டு மாவட்டமாக மதுரை மாவட்ட அதிமுக செயல்பட்டது. ஆனால், மகனுக்கு எம்பி ‘சீட்’ பெறுவதற்காக ராஜன் செல்லப்பா, தன் கட்டுப்பாட்டில் இருந்த புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க ஒப்புக்கொண்டார்.

மாநகர் அதிமுகவில் மத்திய தொகுதி, மேற்கு தொகுதி, தெற்கு தொகுதி, வடக்கு தொகுதி ஆகியவை உள்ளன. புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளும், புறநகர் மேற்கு மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன. தற்போது மாநகரத்தை புறநகர் போல் 2 ஆக பிரிக்கப்பட உள்ளதாக அக்கட்சியினர் மத்தியில் தகவல் பரவுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த 6 மாதத்திற்கு முன் மாநகரத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தலா 2 தொகுதிகள் வீதம் பிரித்து மாநகரத்தை இரண்டாகப் பிரிக்க அதிமுக தலைமை முன்பு தீவிரமாக இருந்தது. அதன்பின்னணியில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் இருப்பதாகக் கூறப்பட்டது.

ஏனெனில், அவரது ஆதரவாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான சரவணனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பெற்றுக் கொடுக்க ஆர்பி.உதயகுமார் முதலமைச்சர் கே.பழனிசாமியிடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்த மாநகர் அதிமுகவை 2 ஆக பிரிக்க முயற்சித்ததாக கூறப்பட்டது.

அதற்கு செல்லூர் கே.ராஜூ எதிர்ப்பு தெரிவித்தால் அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது. ஆரம்பத்தில் சரவணன் எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது அவரது அணியில் சரவணன் எம்எல்ஏ சேர்ந்தார். அதன்பிறகு கட்சியில் பொறுப்பு வாங்கி கொடுக்காததால் ஓ.பன்னீர் செல்வத்திடம் சரவணன் எம்எல்ஏ முன்போல் நெருக்கம் இல்லை. ஆர்பி.உதயகுமார் ஆதரவாளராக தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறார். தற்போது மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை கேட்டு ஆர்பி.உதயகுமார் மூலம் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் மாநகரத்தை 2 ஆக பிரிக்க வாய்ப்புள்ளது. இதைத்தடுக்க அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தற்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் நெருக்கமாகத் தொடங்கியுள்ளார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்திடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகரத்தை 2 ஆக பிரிக்காமல் இருக்க அவரது உதவியை நாடியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x