

விவசாய விரோத, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசுதான், அதிமுக என்ற ஊழல் அரசுக்குப் பாதுகாவலனாக உள்ளது. இந்த விவசாய விரோத பாஜக அரசையும் - விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிமுக அரசையும் விரட்டி அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
இன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற (மறைந்த) மா.மீனாட்சிசுந்தரம் திருவுருவப் படத்தைக் காணொலி வாயிலாக ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''தமிழகத்தில் கரோனாவில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் வேலை இழந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கமாகக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். முதல்வர் பழனிசாமி கேட்கவில்லை.
அறுவடை செய்த நெல் மழையில் அழிந்து போகிறது. நெல்லை வாங்க நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை. நெல்லுக்குரிய விலையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உயர்த்திக் கொடுக்க முதல்வர் பழனிசாமிக்கு மனமில்லை.
சன்ன ரக நெல், குவிண்டால் ஒன்றுக்கு 1,958 ரூபாய் சாதாரண ரக நெல்லுக்கு 1,918 ரூபாய். இந்த விலை எப்படி கட்டுப்படியாகும்? நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால், அதுபற்றி முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. அதே நேரத்தில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலையையும் ரத்து செய்யும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது அதிமுக.
இன்றைக்கு அந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கினை ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம் “இதற்குப் பதில் சொல்லுங்கள்” என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால் அதிமுகவுக்கு, அந்த வழக்குகளில் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளக்கூட தைரியம் இல்லை.
அப்படி வழக்குத் தொடுத்தால் பழனிசாமி வீட்டில் ரெய்டு நடக்கும். இங்குள்ள அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடக்கும். ஏன், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிலும் ரெய்டு நடக்கும். ரெய்டுகளுக்குப் பயந்து - விவசாயிகளின் நலனை மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துள்ள அரசு - பழனிசாமி அரசு.
நேற்றைக்குக் கூட பாருங்கள். மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது. இந்த ஆண்டே இந்த ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது - மத்திய பாஜக அரசு இந்த ஆண்டு 27 சதவீதமும் கொடுக்க முடியாது; 50 சதவீதமும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டைக் கொடுங்கள் என்று திமுக மூத்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதையும் ஏற்க மத்திய பாஜக அரசு மறுத்துவிட்டது.
இன்னொரு செய்தி வந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீதத்தை எடுத்து முன்னேறிய வகுப்பினருக்குக் கொடுத்திருக்கிறார்கள். வங்கிப் பணியாளர் தேர்வில் இந்த அநியாயம் நடந்திருக்கிறது. மத்திய சட்டப் பல்கலைக்கழகத்தில் 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்கிறார்கள்.
மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவரை ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விடாமல் தடுக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் தட்டிக் கேட்க மறந்து “கமிஷன், கலெக்சன், கரெப்ஷனில்” மூழ்கிக் கிடக்கிறது அதிமுக அரசு.
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மத்திய பாஜக அரசு. விவசாயிகளுக்கு எதிரான மத்திய பாஜக அரசு - இது டெல்லியில். இட ஒதுக்கீடு உரிமை பறிபோவதைத் தட்டிக் கேட்க முடியாமல் - விவசாயிகள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் அரசு அதிமுக அரசு - இது தமிழகத்தில்!
ஆகவே விவசாய விரோத, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசுதான், அதிமுக என்ற ஊழல் அரசுக்குப் பாதுகாவலன்; விசுவாசமிக்க பாதுகாவலன். இந்த விவசாய விரோத, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசையும் - “விவசாயி” “விவசாயி” என்று சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிமுக அரசையும் விரட்டி அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.