

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ, அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இந்நிலையில், வெற்றிவேல் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஜினிகாந்த், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்களாக 90களில் பிரபலமானவர்களில் வெற்றிவேல் முக்கியமானவர். சேலத்தைச் சேர்ந்த வெற்றிவேல் கிரிக்கெட் விளையாட்டு வீரர். மூப்பனாரின் தீவிர ஆதரவாளர். 1996-ல் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். திமுக கூட்டணியில் தமாகா சென்னை மாநகராட்சியில் கணிசமான இடத்தைப்பெற்றபோது அதன் மன்றத் தலைவராக இருந்தார்.
ரஜினியின் தீவிர ரசிகரான வெற்றிவேல் அவரிடம் நல்ல நட்பு கொண்டிருந்தார். மூப்பனார் மறைவுக்குப் பின் அதிமுகவில் இணைந்த வெற்றிவேல் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் வென்றார். பின்னர் 2016-ல் பெரம்பூர் தொகுதியில் வென்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் தினகரன் அணியில் பிரதான தலைவராக அமமுக பொருளாளராக விளங்கினார்.
இந்நிலையில், அவருக்குக் கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் 9-ம் தேதி முதல் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் நேற்று மாலை காலமானார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, வெற்றிவேலின் மறைவுச் செய்தியை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், வெற்றிவேல் குடும்பத்தினரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.