

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் விரும்பும் இடத்தில் அமையும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தென்காசி மாவட்டம், மத்தளம்பாறையில் உள்ள ZOHO மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் கட்டுமான நிறுவனத்தை கிராமப்பறங்களில் நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, ZOHO நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்,தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், அ.மனோகரன், சரவணன் (மதுரை தெற்கு) ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மென்பொருள் கட்டுமானங்களை கிராமப்புறங்களில் நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் எனவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ZOHO மென்பொருக் கட்டுமான நிறுவனங்கள் பெரு நகரங்களில் இருந்து கிராமப்புறங்களை நோக்கி நகர்ந்து கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து மென்பொருள் கட்டுமானத் துறையில் பணியமர்த்தி வருகிறது.
உலகளவில் மென்பொருள் கட்டுமானத் துறையில் பணிபுரிவோர் கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். நமது கலாச்சாரம், பண்பாடு மாறாமல் மென்பொருள் கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவதற்காக தமிழக அரசுடன் இணைந்து கிராமப்புறங்களில் இளைஞர்களுக்கு மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை கொடுத்துள்ளார்.
அனைத்துக் கட்சி மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இன்னும் இடம் தேர்வு முடிவடையவில்லை. அனைத்து மக்களும் எளிமையான வந்து செல்லும் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.