

‘‘ பெண் ஊராட்சித் தலைவர்கள் தேர்வான இடங்களில் கணவர், உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிடுகின்றனர்,’’ என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோபிரகாஷ் குற்றம்சாட்டினார்.
கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை மீது உண்மைக்கு மாறாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கை அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டிற்கு மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோபிரகாஷ் தலைமை வகித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண் ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், அவர்களது கணவரோ, உறவினர்களோ நிர்வாகத்தில் தலையிடுகின்றனர்.
ஒரு பெண் ஊராட்சித் தலைவருக்கு பதிலாக 10 பேர் தலையிடுகின்றனர். நாங்கள் எப்படி 10 பேர் சொல்வதை கேட்க முடியும். இதை அரசு தடுக்க வேண்டும்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளால், ஊராட்சி செயலாளர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் ஊதியத்திற்காக காத்திருக்க வேண்டியநிலை உள்ளது. எங்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். நாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீழ் செயல்படும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும், என்று கூறினார்.