

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையைக் கொண்டது. 6 வழிச் சாலை என்பதால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடப்பதுண்டு. விபத்து எதிரில் வரும் வாகனத்தால் மட்டும் ஏற்படுவதல்ல. பராமரிப்பில்லாத நமது வாகனத்தாலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று மதியம் வேலூரிலிருந்து இந்தச் சாலையில் சென்னையை நோக்கி ஒரு கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. காரில் கணவன், மனைவி இருந்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலைய மேம்பாலம் அருகில் ஆறு வழி நெடுஞ்சாலையில் கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் வலதுபுற பின்பக்கச் சக்கரம் கழன்றோடியது.
இதனால் கார் நிலைகுலைந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக காரின் பின்புறம் வேகமாக எந்த வாகனமும் வந்து மோதவில்லை. காரும் சாலைத் தடுப்பை மோதி எதிர்ப்புறச் சாலையில் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
கார் பக்கவாட்டில் கவிழ்ந்ததால் காரில் சிக்கியவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். கார் மீது வேறு வாகனமும் மோத வாய்ப்பிருந்தது. அப்போது அவ்வழியாக விமான நிலைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றுகொண்டிருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இதைப் பார்த்தார்.
உடனடியாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி தன்னுடன் வந்த போலீஸார், ஊழியர்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனத்தை நிமிர்த்தி அதில் சிக்கி, காயத்துடன் இருந்த ஆணையும், பெண்ணையும் காரிலிருந்து மீட்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்ல உதவி செய்தார்.
பின்னர் காரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்துவிட்டு அங்கிருந்து சென்றார். விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆட்சியரே நேரில் இறங்கி வந்து உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை அங்குள்ளவர்கள் பாராட்டினர்.