

உலக உணவு தினத்தை முன்னிட்டு பழைய நாணயம் 5 பைசா கொண்டு வந்தவர்களுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி திண்டுக்கல்லில் உள்ள ஓட்டலில் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகேயுள்ள பிரியாணி ஓட்டலில் இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு பழைய 5 பைசா நாணயம் கொண்டுவருபவர்களுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 10 மணி முதலே ஓட்டல் முன்பு 5 பைசா நாணயத்துடன் கூட்டம் கூடத்தொடங்கியது. கூட்டத்தை தவிர்த்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஓட்டல் உள்ள தெருவின் இருபுறமும் நாற்காலிகள் போடப்பட்டு அமரவைக்கப்பட்டு, ஒவ்வொருவராக வந்து ஐந்து பைசா கொடுத்து பிரியாணியைப் பெற்றுச்செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.
முதலில் வந்த 100 பேருக்கு அரை பிளேட் பிரியாணி என அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டம் அதிகம் காரணமாக 500 பேருக்கு 5 பைசாவிற்கு அரைபிளேட் பிரியாணி வழங்கப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் முஜிபுர்ரகுமான் கூறியதாவது:
பழமையை பாதுகாக்கும்விதமாக கடந்த ஆண்டு கீழடியை போற்றும்வகையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐந்து பைசாவிற்கு பிரியாணி வழங்கினோம்.
இந்த ஆண்டும் பழமையை போற்றும் விதமாக 5 பைசாவிற்கு பிரியாணி அறிவித்தோம். மக்கள் பழைய நாணயத்தை வீட்டில் தேடி எடுத்துவந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் பிரியாணியை பெற்றுச்சென்றனர், என்றார்.