

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடு தமிழக அரசுக்கு எதிராக உள்ளது என, திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று (அக். 16) நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தருமபுரி வருகை தந்தார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இரண்டாவது முறையாக மத்தியில் பொறுப்பேற்ற பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்கள், தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்கள் போன்றவற்றை கொண்டு வந்துள்ளது. இவற்றை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இதைக் கண்டித்தும், ரத்து செய்யக் கோரியும், வருகிற 26-ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடு தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து என்பது தமிழக மாணவர்களின் நலனை பெரிதும் பாதிக்கும். அதிமுக தலைமையிலான தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முயன்று வருகிறது.
பல்கலைக்கழகத்தின் பெயரில் இருந்து அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் நிலை உருவாகி இருப்பது வேதனைக்கு உரியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீடு அப்படியே தொடர வேண்டும் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
தமிழகத்தில் உடனடியாக 100 சதவீதம் பொது போக்குவரத்தை தமிழக அரசு தொடங்கிட வேண்டும். தொழிற்சாலைகள் உள்ள திருப்பூர், கோவை போன்ற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தையும் உடனே தொடங்க வேண்டும்".
இவ்வாறு அவர் கூறினார்.