Published : 16 Oct 2020 03:24 PM
Last Updated : 16 Oct 2020 03:24 PM

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர அக்.31 வரை வாய்ப்பு; அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி அறிவிக்கப்பட்டால் 69 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறியாக மாறிவிடும். நுழைவுத்தேர்வு அறிவிக்கப்படும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உருவாகும். இதையெல்லாம் பரிசீலித்துத்தான் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி 100 சதவீதம் தேவையில்லை என்பது தமிழக அரசின் முடிவு என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் இன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“உயர் சிறப்பு தகுதி வழங்குவது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கடிதம் எழுதியது குறித்துக் கேள்வி எழுப்பப்படுகிறது. அண்ணா பலகலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்பதற்குக் காரணம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர் கல்வித்துறைக்குக் கொடுத்த முக்கியத்துவம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் சிறப்பு தகுதி அறிவிக்கப்பட்டால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீண்ட நெடிய நாட்களாகப் போராடி கொண்டுவந்த 69 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறியாக மாறிவிடும். மாணவர்கள் சேர்க்கையின்போது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்படும், கட்டணமும் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலை உருவாக்கப்படும்.

இதையெல்லாம் பரிசீலித்துத்தான் தமிழகத்தில் உயர் கல்வியில் இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய உயர்ந்த இடத்தில் உள்ள நிலை மாறக்கூடாது என்று தமிழக அரசு நினைக்கிறது. கூடுதல் கட்டணம் கூடாது, நுழைவுத்தேர்வு இருக்கக்கூடாது என்பதும் தமிழக அரசின் எண்ணம். அதை ஈடேற்றக்கூட வகையில் வருகின்ற 3 ஆண்டு காலத்தில் வருகின்ற துணைவேந்தர்கள் அங்கே பணியாற்றுவார்கள்.

ஆனால், அரசுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தை காலாகாலத்திற்கும் காக்கவேண்டிய எண்ணம் உள்ளது. ஆகவே, இந்த நிகழ்வுகள் இதை மாற்றி அமைக்கும் நிலையில் உள்ள பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்பது அரசின் எண்ணம். அதே நேரம் உயர் சிறப்பு தகுதி இருந்தால் என்ன நிலை இருக்குமோ அத்தனை வசதிகளும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும், மாணவர்களின் ஆராய்ச்சிப் படிப்புக்கும் தேவையான அத்தனை வசதிகளும் செய்து தரப்படும்.

உயர் சிறப்பு தகுதி வந்துதான் அண்ணா பல்கலைக்கழகம் மேம்படும் என்கிற அவசியம் இல்லை. இப்போதே பார்த்தீர்கள் என்றால் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் பிரிவு உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பிரிவில் மேம்பட்டுதான் இருக்கிறோம். துணைவேந்தர் எழுதிய கடிதத்துக்கு விளக்கம் கேட்டு அரசு கடிதம் எழுதி உள்ளது.

உயர் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதேபோன்று பணத்தை எப்படிச் சரி செய்வீர்கள் என்கிற விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இட ஒதுக்கீட்டுக்குப் பங்கம் ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ளும். வெளி மாநில மாணாக்கர்களை அதிகம் சேர்க்க வாய்ப்புள்ளது, மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு உள்ளது, இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதை அரசு அனுமதிக்காது.

பல்கலைக்கழகம் அரசுக்கு உட்பட்டதுதான். உயர் சிறப்பு தகுதி தேவை இல்லை என்பதை மத்திய அரசுக்கு கடிதம் போட்டுவிடுவோம். 100 சதவீதம் எங்களுக்கு உயர் சிறப்பு தகுதி தேவை இல்லை. துணைவேந்தர் அளிக்கும் பதிலை அடுத்து அவர் மீதான நடவடிக்கை தேவை என்றால் ஆளுநருக்குக் கடிதம் எழுதுவோம்.

2035-ல் உயர்கல்வி மாணவர்கள் சதவீதம் 50 ஆக உயர்த்தப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் 26. ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த பெரும் முயற்சி காரணமாக உயர் கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டு 49%. இந்த ஆண்டு 50% சதவீதத்தை கடந்துவிடுவோம். இதிலிருந்தே அதிமுக அரசு கல்விக்காக எடுத்த பெருமுயற்சி தெரியவருகிறது.

பிளஸ் 2 தேர்வில் ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்குகிறோம். இந்த மாத இறுதி வரையில் (அக்.31 வரை) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பித்து, இடமிருக்கும் கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்”.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x