

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் இன்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர்.
புரட்டாசி அமாவாசையையொட்டி கடந்த 14-ம் தேதி முதல் நாளை (17-ம் தேதி) வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலையில் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.
பக்தர்கள் வருகையாலும் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாகவும் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதோடு, பக்தர்கள் கூட்டமும் அதிகமாகக் காணப்பட்டது. போலீஸார் மற்றும் வனத்துறையினர் பக்தர்கள் ஒழுங்குபடுத்தி வரிசையாக மலையேற அனுமதித்தனர்.
இருப்பினும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் மலையேற அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், இரவு நேரத்தில் சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அதனால், தரிசனம் முடித்த பக்தர்கள் இரவு தங்குவதைத் தவிர்த்து உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.